“அழுத பிள்ளை சிரிச்சுதாம், கழுதை பாலைக் குடிச்சதாம்… கழுதை முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்…“ இப்படி எவ்வளவு கேள்விப்பட்டிருப்போம். அதுக்கு என்ன காரணம்? அதுல உண்மை இருக்குதா அப்டின்னு யாராவது நெனச்சுருக்கோமா சார்.? வயிறு உப்புசம், வலி இருக்கற குழந்தைக்குக் கழுதை பாலைக் குடுத்தா அது சரியாய் போயி அந்தக் குழந்தை சிரிக்கும். இதுதான் காரணம். கடிக்கவும் கடிக்காது. உதைக்கவும் உதைக்காது சார் கழுதை. எல்லார் கிட்டையும் ஒரே மாதிரி பழகும். நாய் பூனை இதுங்கள மாதிரி தெரிஞ்சவங்ககிட்ட ஒருமாதிரி தெரியாதவங்க கிட்ட ஒருமாதிரின்னு அதுக்கு பழகத் தெரியாது. இது தான் உண்மை” என்றார் வழக்கறிஞரும், பிராணிகள் காவலரும், கழுதைப்பண்ணை அதிபருமான ராஜூ.
திருச்சி அருகில் உள்ள முசிறியில் ஐந்திணை விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் நிறுவனம் என்கிற ஒன்றை (AINTHINAI FARMER PRODUCER COMPANY – AFPC) நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே அழிந்து கொண்டிருக்கும் கழுதை இனத்தைப் பாதுகாக்கவும் அதன் மூலம் வருவாய் ஈட்டவும்தான் என்பதுதான் சுவாரசியம்.
“நாம அசிங்கமாப் பாக்கற எல்லா மிருகங்களும் அன்புக்கு ஏங்கற மிருகங்கள் தான். பன்றிக்கும் கழுதைக்கும் அதில் முதலிடம். நாய் மற்றும் பூனையை விரும்பி வளர்ப்பவர்கள் ஏராளம். ஆனால் பன்றியையும் கழுதையையும் நாம அப்படிப் பாக்கறதில்லை அப்படிங்கறது தான் உண்மை. பன்றிக் கறி என்ன விலை விக்குது..? நெதர்லாந்திலே கருப்பு பன்றிக் கறிக்கென்று தனி ரெஸ்டாரெண்ட்ட் இருக்கு. இங்கல்லாம் அப்படி இல்லை சார். ஒவ்வொரு மிருகத்திலும் உள்ள மருத்துவ குணங்கள் வெகுசிலருக்கே கண்ணில் படுகிறது. அதனால பொறப்புல எதுவும் குறைச்சல் இல்ல” என்கிறார்.
Add Comment