விமலாதித்த மாமல்லன்
இப்படியொரு தர்மசங்கடத்தில் போய் தாம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று அவர் என்றுமே நினைத்திருக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்தக் கடன்காரனுக்குத்தான் புத்தி லத்தி தின்னும்படியாகப் போயிற்று என்றால் தமக்கு என்ன ஆயிற்று என்று நொந்துகொண்டார். ஐம்பதைத் தாண்டியவன் செய்கிற காரியமா இது. கொஞ்சமேனும் பொறுப்பு வேண்டாமா. வயதுக்குத் தகுந்த பொறுமை வேண்டாமா. அப்படி என்ன ஆத்திரம். அவசரக் குடுக்கையாக ஓடிப்போய் புகார் கொடுக்க. ஊரில் எவன்தான் காசு வாங்கவில்லை. எவன் எவனோ கோடி கோடியாகக் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றான். அவனைப் பற்றியெல்லாம் துருதுருவென ஓடிப்போய் புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா. அப்படியே கொடுத்தாலும் யார் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள். எடுத்துக் கொள்வதாய் எதிரில் சொன்னாலும் சினிமாவில் காட்டுவதுபோல இவன்தான் புகார் கொடுத்தான் என்று போலீஸே போட்டுக்கொடுத்துவிடும் என்றுதானே யாரும் ஸ்டேஷன் பக்கமே போவதில்லை.
கேவலம் ஒரு பாட்டில் கூல் டிரிங்க்கை, வெயில் கொளுத்துகிறதே என்று எப்போதாவது குடிப்பதைக்கூட உள்ள விலைக்கு வாங்கிக் குடிக்க முடிகிறதா? MRPக்குமேல் விற்கக் கூடாது என்கிறது சட்டம். தண்ணி பாட்டிலுக்குத் தாலி கட்டியதைப்போலக் கழுத்திலேயே அச்சடித்து வைத்திருக்கிறான் MRP இவ்வளவு என்று. மேலே ரெண்டு ரூபாய் வைக்காமல் எவன் விற்கிறான். கேட்டால், ‘எத்தனையோ கடைல மூன்று ரூபாய் மேலே வைத்து விற்கிறார்கள். நாங்கள் நியாயமாகத்தான் விற்கிறோம்’ என்கிறான். கூலிங்குக்கு கரண்ட்டு பில் காசாம் அந்த எக்ஸ்ட்ரா இரண்டு ரூபாய்.
பத்து ரூபாய்க்கு இரண்டு ரூபாய் என்று அவன் வாங்குகிறானே அதற்கு என்ன பெயர். அவனிடம் கேட்கமுடிகிறதா உங்களால் என்றுதான் கேட்டான் கனேசன். கனேசனோ தினேசனோ ஏதோ ஒரு சன். சனியன். பொசுக்கென்று ரோசம் பொத்துக்கொண்டு விட்டது. ரத்தம் தலைக்கேறி சூடாக்கிவிட்டது. விருட்டென வெளியில் வந்தவர் பஸ் பிடித்து நேராய் சாஸ்திரி பவன் வாசலில்தான் போய் நின்றார். தபதபவென ஒரே மூச்சாய் இருபது முப்பது படிகளை ஏறி சிபிஐ ஆபீசுக்குள் நுழைந்துவிட்டார்.
Add Comment