மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கிறது மதுரை புத்தகக் கண்காட்சி. எதிர்வரும் பதினாறாம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை அரங்கம் திறந்திருக்கும். மாலையில் இலக்கிய ஆர்வலர்களின் ரசனையைக் கருத்தில் கொண்டு பேச்சரங்கங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
“தமிழக அரசு மாணவர்களின் நலனை முன்னெடுத்துப் பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. மிகப் பெரிய நூலகங்கள் அமைந்து கொண்டிருக்கின்றன. மதுரை கலைஞர் நூலகம் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கிறது. அதை மக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். வருடந்தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் மெருகேற்றப்பட்டு இன்னும் பெரிதாக மாறி வருகிறது. மக்கள் ஆதரவு தான் இதை நிலைப்படுத்தும்” என்றார் புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பேசிய தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி.
“அரசு எடுத்து நடத்த ஆரம்பித்தபிறகு நல்ல முறையில் நடக்கிறது என்பது உண்மை தான். ஆனால் பெரிதாக விளம்பரங்களோ, அறிவிப்புகளோ வெளியிடப்படவில்லை. தமுக்கம் அரங்கம் எப்போதும் ஏதாவது கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடமாக இருப்பதால் மக்கள் வருவது வழக்கம். அதுபோல் தான் இப்போதும் வந்து போகிறார்கள். மக்கள் நடமாட்டம் இருக்கும் அளவு விற்பனையில் பெரிதாக எதுவும் இல்லை” என்றார் அங்கு ஸ்டால் போட்டிருக்கும் ஒரு விற்பனையாளர்.
“பார்வையாக ஸ்டால்களை ஒதுக்கமாட்டேன் என்கிறார்கள். ஒரே ஒரு முறை சந்தாவை புதுப்பிக்க மறந்து விட்டேன். அதன் பிறகு பபாசி உறுப்பினராகத் தலைகீழாக நிற்கிறேன். எதாவது ஒரு காரணம் சொல்லி அதைச் செய்யமாட்டேன் என்கிறார்கள். அதனால் ஒரு உறுப்பினருக்குக் கிடைக்கும் சில சலுகைகள் மறுக்கப்படுகின்றன. அடுத்த வருடம் நிலைமை மாறுகின்றதா பார்க்கலாம்” என்றார் பெயர் சொல்ல விரும்பாத உள்ளூர் புத்தகக் கடைக்காரர் ஒருவர். இரண்டு ஆள்களை வெளியில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள், புக் மார்க்கை அந்தப் பக்கம் செல்வோர் கைகளில் கொடுத்து ‘வாங்க வாங்க’ என்று அழைத்துக்கொண்டிருந்தார்.
Add Comment