கோவை, பஞ்சாலைகளுக்குப் புகழ் பெற்ற நகரம். இப்படிச் சொல்லி விடுவது எளிது. ஆனால் தரமான பஞ்சை இனம் காண்பது எளிதல்ல.
பஞ்சின் நீளம் எவ்வளவு? அது நன்றாக விளைந்துள்ளதா? பலம், தடிமன் சரியான அளவில் உள்ளதா? அந்தப் பஞ்சின் வியர்வை உறிஞ்சும் தன்மை எந்த அளவில் இருக்கிறது? ஆடை நெய்யும் தரம் உள்ளதா? இந்தப் பண்புகளை ஆராயத்தான் உலக அளவில் பஞ்சு மற்றும் நூற்பு ஆராய்ச்சி நிலையங்களும், டெக்ஸ்டைல் விஞ்ஞானிகளும் செயல்பட்டு வருகிறார்கள்.
பஞ்சின் தரத்தை ஒன்றே கால் நிமிடத்தில் துல்லியமாக் கண்டுபிடித்து விடும் high volume instrument (HVI) என்ற இயந்திரத்தை வைத்துள்ளனர் கோவை மலுமிச்சம்பட்டியில் இயங்கும் MAG Solvics நிறுவனத்தினர்.
“பஞ்சின் தரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு நிமிட நேரத்தில் தரும் இந்த இயந்திரத்தை உலக அளவில் மூன்றாவதாகத் தயாரித்தது நாங்கள்தான். ஒரு சிறு நிறுவனமாக ஆரம்பித்து, இன்று சர்வதேச ஜவுளித் துறையில், மிகப்பெரிய நவீன இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக உருவெடுத்திருகிறோம். பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து முப்பத்தைந்து லட்சம் ரூபாய் வரையிலான இயந்திரங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு எங்களிடம் இருக்கும் சில இயந்திரங்கள், உலகத்தில் நான்கு பேரிடம் மட்டும் தான் உள்ளது. எங்கள் ஆராய்ச்சியில் உருவான இயந்திரங்கள் இன்றைய தேதியில் நாற்பது நாடுகளுக்கு மேல் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. தேசிய அளவில் ஐந்து விருதுகளை பெற்றிருக்கிறோம்” என்றார், மணிகண்ட மூர்த்தி. இந்த நிறுவனத்தின் இயக்குநர் இவர்.
Add Comment