அரசுத் தகவலின் படி 221 பேர் இறந்துபோகவும் அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் உடைமைகளையும் இருப்பிடங்களையும் இழக்கவும் காரணமான மணிப்பூர்க் கலவரம் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது.
மெய்தி இன மக்களைப் பட்டியல் இனத்தில் சேர்க்கப் பரிந்துரைக்கிறோம். மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றம் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு அனுப்பிய இந்தப் பரிந்துரையே மணிப்பூர்க் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி. ஆனால் பிரச்னை இது மட்டுமல்ல…
பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதிகளை விரிவுபடுத்தும் திட்டத்தை ஆளும் பா.ஜ.க. அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்திருந்தது. அதன்படி அரசுக்குச் சொந்தமான காட்டுப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களை காலி செய்யப் பழங்குடியின மக்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள். சுராசந்த்பூர் மாவட்டத்தில் மட்டும் முப்பத்தெட்டுக் கிராமங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளானவை என்று அரசு அறிவித்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிகள் இது இந்திய வனத்துறைச் சட்டத்துக்கு எதிரானது என்று எதிர்க்குரல் எழுப்பினர். அப்போதிருந்தே கலவரத்துக்கான ஆயத்தங்கள் நடைபெறத் தொடங்கி விட்டிருந்தன.
2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஐம்பத்து மூன்று சதவிகிதம் பேர் மெய்தி இனத்தவர்கள். நாற்பத்தேழு சதவிகிதம் குக்கி, நாகா மற்றும் இதரப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
Add Comment