மராட்டியச் சமூக இடஒதுக்கீடு தொடர்பாகக் கடந்த வாரம் சுமார் நாற்பதாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு மும்பை நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். அதைத் தொடர்ந்து, தகுதியான மராட்டியர்களுக்குக் குன்பி (Kunbi) சாதிச் சான்றிதழ் வழங்குவது உள்பட அவர்களின் முக்கியக் கோரிக்கைகள் சிலவற்றை மகாராஷ்டிரா அரசு ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மும்பை ஆசாத் மைதானத்தில் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் ஜரங்கே பாட்டில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஐந்தாம் நாளன்று முடித்துக் கொண்டார்.
குன்பி சமூகத்தினர் நானூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்டவர்கள். அவர்களுக்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில் இந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். குன்பி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கெனத் தனியாக மொழி கிடையாது. அவர்கள் வாழும் பகுதியில் பேசும் மொழியையே பேசுகின்றனர். மகாராஷ்டிரா பகுதிகளில் வாழ்பவர்கள் மராத்தி பேசுகிறார்கள். கோவா பகுதிகளில் வாழும் குன்பிகள் கொங்கனி பேசுகிறார்கள். கர்நாடகப் பகுதிகளில் வசிப்பவர்கள் கன்னடம் பேசுகிறார்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் முகலாய, பீஜப்பூர் பேரரசுகள் மேற்குப் பகுதியில் ஆட்சியமைக்க விரும்பினர். அதனால் மேற்குப் பகுதியை நோக்கித் தொடர்ந்து படையெடுத்தனர். அப்போது அவர்களை எதிர்க்கவும், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, தெற்கில் தஞ்சாவூர் வரை போரிட்டு ஆட்சியமைக்கவும் மராட்டிய மன்னர் சிவாஜி ‘மராத்தா சக்தி’ என்ற அமைப்பை உருவாக்கினார். மராத்தா சக்தியில் போர்ப்படை, நிர்வாகம் எனப் பல துறைகள் இருந்தன.















Add Comment