ஐஐடியில் படித்தவர்கள் பலரும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போய்விடுவார்கள். அதே போல இந்தியாவில் இணைய வணிகத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களைத் தாண்டி இன்னொன்று வர முடியாது. இந்த இரண்டையும் பொய்யாக்கிச் சாதித்து இருக்கிறார்கள் இரண்டு ஐஐடி டெல்லியில் படித்த விதித் ஆத்ரேவும் சஞ்சீவ் பர்ன்வால்லும். இந்த நண்பர்களின் பயணம் எப்படி நடந்தது?
1991ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த விதித் ஆத்ரேவின் குடும்பத்திற்கு உத்திரப்பிரதேசத்தில் விவசாயப் பின்னணி. இவருடைய தந்தை டெல்லி நகர நீர்த் துறையில் பணியாற்றியவர். ஐஐடி டெல்லியில் மின் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்தார் விதித். அதைத் தொடர்ந்து பிரபல வணிக நிறுவனமான ஐடிசி (ITC) லிமிடெட்டில் விநியோக மேலாளராகவும், பின்னர் செல்பேசி விளம்பர நிறுவனமான இன்மொபியில் வளர்ச்சிக்கான வியூக அமைப்பாளராகவும் இருந்தார்.
இவரோடு ஐஐடி டெல்லியில் அதே துறையில் படித்தவர் சஞ்சீவ் பர்ன்வால். இவர் பிறந்தது ஜார்கண்ட் மாநிலத்தில். படிப்புக்குப் பிறகு ஜப்பான் சோனி நிறுவனத்தில் ஆன்ட்ராய்ட் செல்பேசிகளின் காமிரா மென்பொருள் உருவாக்கக் குழுவில் பணிபுரிந்தார் சஞ்சீவ். 2016ஆம் ஆண்டு இவர்கள் இணைந்து தொடங்கிய சமூக வணிக இணையச் சந்தை மீஷோ. இன்று 12 கோடிக்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு மாதமும் மீஷோவைப் பயன்படுத்துகிறார்கள்.
Add Comment