சட சடவென்று துப்பாக்கிச் சத்தம். மதில் சுவரில் வட்டமாக ஒரு பெரிய துளை, சுற்றிப் புகையும் கதறலும். அந்தத் துளையின் வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் காத்துக்கொண்டிருந்தது, துப்பாக்கிக் குண்டு. மொத்தம் 24பேர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் மட்டும் இறந்துள்ளனர். விடியற் காலையில் இந்தக் காட்சியைக் கண்ட பொதுமக்கள் பீதியில் குழம்பினார்கள். சம்பவம் நடந்த இடம் காங்கோ நாட்டின் சிறைச்சாலை. காரணம் நிர்வாகத்தின் மனித உரிமை மீறல் என்கிறார்கள்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாசா. இதன் அருகே உள்ள மகலா என்ற பகுதியில் அந்நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. தமிழ்நாட்டின் பெரிய சிறையான புழல் சிறையில் 3000 கைதிகள் அடைக்கலாம். காங்கோ சிறைச்சாலையில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேல் கைதிகள் உள்ளனர். அவ்வளவு பெரிய இடமா? இல்லை. நியாயமாகப் பார்த்தால் 1500 கைதிகளை அடைக்கும் அளவுக்குத்தான் அங்கே இடமிருக்கிறது. அதில் 12000 பேரை அடைத்து வைத்துள்ளனர். இதில் குற்றம் செய்து தண்டனைக்காலத்தில் உள்ள கைதிகளும் குற்றத்திற்குத் தீர்ப்பு வராமல் காத்திருக்கும் அடங்குவர். விசாரணைக் கைதிகள் மட்டுமே சுமார் அறுபது சதவீதத்திற்கும் மேல் உள்ளார்கள்.
சென்ற திங்களன்று இச்சிறைச்சாலையை உடைத்துத் தப்ப முயன்ற 129 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறையால் கொல்லப்பட்டோர் இருபத்துநான்கு பேர். கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 105 கைதிகள் இறந்துள்ளனர். இதைத் தவிர்த்து 59 கைதிகள் காயமடைந்துள்ளனர். இவ்வளவு முயன்றும் ஒரு கைதியால் கூட தப்பி வெளியே செல்ல முடியவில்லை. சிறையிலிருந்து தப்ப நினைத்து உயிரை இழந்தது தான் மிச்சம்.
Add Comment