சொகுசுப் படகு (Luxury yatcht) என்பது அதிகச் செலவாகும் விஷயம். எலோன் மஸ்க் உட்பட, பில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கும் உலகப் பணக்காரர்கள் பலர் இப்படிச் சொந்தமாக சொகுசுப் படகு வைத்திருக்கிறார்கள். சொந்தமாக இல்லாவிட்டாலும் வாடகைக்கு எடுத்து உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம். அதிகமில்லை இந்தியப் பணத்தில் ஒன்னரை கோடிதான் வாடகை. அப்படி ஒரு சொகுசுப் படகில் நடந்த விபத்து அதன் அமானுஷ்யத் தன்மையால் பேசுபொருளாகிவிட்டது.
சொகுசுப் படகின் விலை மில்லியன் டாலராக இருக்கலாம். அதன் உரிமையாளர் பில்லியனராக இருக்கலாம். ஆனால் சொகுசுப் படகு செல்வதற்கு மட்டும் தனியாக ஒரு கடல் இந்த உலகில் இல்லை. சாதாரணக் கட்டுமரக் கப்பல்கள் செல்லும் அதே நீரில் தான் சொகுசுப் படகும் செல்ல வேண்டும். கட்டுமரக் கப்பலின் பருவ நிலை பாதிப்பு தான், சொகுசுக் கப்பலுக்கும் உண்டு. அப்படி மாட்டிக்கொண்ட ஒரு விலையுயர்ந்த சொகுசுப் படகை விழுங்கிவிட்டது மெடிட்டெரேனியன் கடல். இந்த விபத்தில் கப்பலுடன் சேர்ந்து 7 பேர் மூழ்கியுள்ளனர். சடலங்களை ஒவ்வொன்றாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்தின் ‘பில் கேட்ஸ்’ என்று அழைக்கப்படும் மைக் லிஞ்ச் கப்பலில் பயணம் செய்தவர்களில் ஒருவர். 59 வயதான மைக் லிஞ்ச் 1996 அட்டானமி என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த அட்டானமி சாப்ட்வேரில் எளிதாக எதையும் தேடமுடியும் என்று பயங்கரமாக விளம்பரப்படுத்தினார். இதனால் அட்டானமி நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்தது. 2011இல் HP நிறுவனத்திற்கு அட்டானமியை விற்றார். இந்த வியாபாரத்தில் இவர் அடைந்த லாபம் இவரைப் பணக்கார நாற்காலியில் உட்கார வைத்தது. ஒரு வருடத்திலே, இவரது ஆட்டோனமியின் கணக்கு வழக்கு சரியில்லை என்று HP நிறுவனம் இவர் மீது குற்றம் சாட்டியது. அன்று ஆரம்பித்த வழக்கு தான், நீண்டு கொண்டே சென்று பன்னிரண்டு வருடம் நடந்து முடிந்தது. தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு திறமையான வழக்கறிஞர்களை வைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார். லிஞ்ச்சை நிரபராதி என்று அறிவித்தார்கள் முடிவில். குற்றம் நிரூபிக்கப் பட்டிருந்தால், 25 வருடச் சிறைத் தண்டனை கிடைத்திருக்கும்.
Add Comment