8. மாரத்தான் மெதுவோட்டம்
மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிப் பயணங்களின்மூலம் இந்தியாவை ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும் என்று காந்தி தீர்மானித்ததும், அதற்கான முதல் காலடியை எடுத்துவைத்ததும் 1901ல். ஆனால், அவருடைய இந்தக் கனவு உண்மையாக நிறைவேறத் தொடங்குவதற்குப் பதினான்கு ஆண்டுகள் ஆயின.
அதாவது, 1915ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து நிரந்தரமாக இந்தியா திரும்பியபிறகுதான் காந்தி மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் நிறையப் பயணம் செய்யத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்த இந்தியத் தரிசனம் அப்போதுதான் அவருக்குக் கிடைத்தது. அதன்பிறகு, அதையே தன்னுடைய முதன்மையான பயண முறையாக ஆக்கிக்கொண்டுவிட்டார்.
எதிலும் தூய்மை, ஒழுங்கு என்று இருந்தவர் காந்தி. ஆனால், இந்திய ரயில்களின் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் அதற்கு நேரெதிரானவை. அழுக்கு, குப்பை, துர்நாற்றம், எச்சில், ஒழுங்கின்மை, அசிங்கமான பேச்சுகள், பிறர்மீது அக்கறையின்மை ஆகியவற்றால் நிரம்பியிருந்த அந்தப் பெட்டிகள் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
காந்தி மூன்றாம் வகுப்புப் பயணத்துக்குப் புதியவர் இல்லை. ஏற்கெனவே லண்டனிலும் தென்னாப்பிரிக்காவிலும் அவ்வகைப் பெட்டிகளில் அவர் பயணம் செய்ததுண்டு. அவை முதல், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளைவிட வசதிக்குறைவாகத்தான் இருக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நாம் கொடுக்கிற காசுக்கு ஏற்ற வசதி. சரிதானே?
Add Comment