14. மென்மையின் மேன்மை
1912 நவம்பர் 17. கோகலே தன்னுடைய தென்னாப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
கோகலேவைப் பிரிவது காந்திக்கு எப்போதும் வருத்தம்தான். ஆனால், இந்தமுறை அவர் மனத்தைத் தேற்றிக்கொள்வதற்கு இரண்டு விஷயங்கள் இருந்தன.
முதலில், கோகலேவின் வருகை தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகப் போராளிகளுக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்திருந்தது. இந்தியர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாகத் தென்னாப்பிரிக்க அரசாங்கம் அவருக்குச் சில நல்ல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்ததால், தாங்கள் சரியான வழியில்தான் நடக்கிறோம் என்கிற கூடுதல் நம்பிக்கையை அவர்கள் பெற்றிருந்தார்கள்.
தென்னாப்பிரிக்க அரசாங்கத்தைப் பெரிதாக நம்பமுடியாது என்பதுதான் இத்தனை ஆண்டுகளாகக் காந்தியின் அனுபவம். ஆனால், கோகலே தன்னுடைய திறமையான ஆராய்ச்சியாலும், வாதங்களாலும் பெற்றுள்ள இந்த வாக்குறுதிகள் எந்தத் திசையில் சென்றாலும் இந்தியர்களுக்கு நல்லதுதான். ஒருவேளை, அரசாங்கம் அந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால், இந்தியர்களுடைய குறைகள் தீரும். ஒருவேளை, அவர்கள் அந்த வாக்குறுதிகளை மீறிவிட்டால், ‘நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்’ என்கிற உணர்வு இந்தியர்களை இன்னும் நன்றாக ஒன்றுதிரட்டும், அதன்மூலம் சத்தியாக்கிரகம் மேலும் வலுப்பெறும்.
Add Comment