22. அன்பான வற்புறுத்தல்
உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவுவது என்று காந்திமட்டும் தீர்மானித்தால் போதுமா? பிரிட்டிஷ்காரர்கள் அந்த உதவியை ஏற்றுக்கொள்ளவேண்டாமா?
அப்போது பிரிட்டிஷ் இந்தியச் செயலாளராக இருந்தவர் கிரிவே பிரபு (ராபர்ட் கிரிவே-மில்னஸ்). அவருக்குத் தங்களுடைய மருத்துவ முதலுதவிக் குழுவைப்பற்றி ஒரு கடிதம் எழுதினார் காந்தி, ‘பிரிட்டன் எங்களுடைய சேவையை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். அதற்கு முன்னால் நாங்கள் ஏதாவது மருத்துவப் பயிற்சி பெறவேண்டும் என்றால் அதற்கும் நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்.’
காந்தியின் கோரிக்கையைக் கிரிவே பிரபு உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை, இந்த உதவிக்குப் பின்னால் அரசியல் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஏதேனும் இருக்குமோ என்று அவர் தயங்கியிருக்கலாம்.
உண்மையில் காந்தியிடம் அப்படி எந்த உடனடி எதிர்பார்ப்பும் இல்லை. இப்போது சிரமத்தில் இருக்கிற ஒருவருக்கு நாம் வலியச் சென்று உதவினால், நாளைக்கு அவர் நம்மை மதித்து நடந்துகொள்ளக்கூடும் என்கிற எண்ணம்மட்டும்தான் அவருடைய மனத்தில் இருந்தது. அதாவது, இந்தியர்களைப் பிரிட்டன் மதிக்கத்தொடங்கவேண்டும், அதன்மூலம், இந்தியர்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் வல்லமை படைத்தவர்கள்தான் என்பதும், தாங்கள் அவர்களை முறையாக நடத்தவில்லை என்பதும் பிரிட்டனுக்குப் புரியவேண்டும், இது காலப்போக்கில் இந்திய விடுதலைக்கு வழிவகுக்கும் என்கிற தொலைநோக்குச் சிந்தனைதான் அவருடையது. ‘இப்ப நான் உனக்கு உதவி செஞ்சா, போர் முடிஞ்சதும் நீ எனக்கு விடுதலை கொடுப்பியா?’ என்று பேரம் பேசும் எண்ணம் அவருக்கு இல்லை.
Add Comment