28. இரு கண்கள்
‘ஆளுநர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்றார் கோகலே, ‘நீங்கள் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது நல்லது.’
அப்போது மும்பையின் ஆளுநராக இருந்தவர் ஃப்ரீமன்-தாமஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட வில்லிங்டன் பிரபு. பின்னாட்களில் (1931 முதல் 1936 வரை) இவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் செயல்பட்டார்.
கோகலேவின் கட்டளைப்படி காந்தி வில்லிங்டன் பிரபுவைச் சென்று சந்தித்தார். வழக்கமான நல விசாரிப்புகளெல்லாம் முடிந்தபிறகு, ‘மிஸ்டர் காந்தி, இங்குள்ள மக்கள் உங்கள்மீது மிகுந்த அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது, இந்த நாட்டில் உங்களுடைய அரசியல் வாழ்க்கை வெற்றிகரமாக அமையப்போகிறது என்று ஊகிக்கிறேன்’ என்றார் வில்லிங்டன் பிரபு.
‘நீங்கள் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கும், உங்களுடைய அன்பான சொற்களுக்கும் நன்றி’ என்றார் காந்தி, ‘நான் கோகலேவின் சொற்படி நடக்கப்போகிறேன். அவர் என்னைச் சரியான வழியில் அழைத்துச்செல்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.’
Add Comment