38. உயர்ந்த மனிதர்
சாந்திநிகேதனத்தில் சில நாட்கள் தங்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் காந்தி புறப்பட்டு வந்திருந்தார். ஆனால், கோகலே இயற்கை எய்தியதைப்பற்றிய தந்திச் செய்தி அவருடைய திட்டத்தைப் புரட்டிப்போட்டுவிட்டது. உடனடியாகப் பூனாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார் அவர்.
கோகலேவின் மரணம் சாந்திநிகேதனத்தில் எல்லாரையும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. அங்கிருந்தவர்களெல்லாம் காந்தியிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள்.
ஃபிப்ரவரி 20 மாலை, சாந்திநிகேதனத்திலிருந்த கோயிலில் கோகலேவின் நினைவாக ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்ற காந்தி தன்னுடைய அரசியல் குருநாதரைப்பற்றி விரிவாகப் பேசினார்.
‘நாம் அனைவரும் நல்லவர்களுடைய நட்பை நாடவேண்டும் என்கிறது துளசிதாசருடைய ராமாயணம். அதாவது, சேவை செய்வதற்காகத் துன்பத்தை எதிர்கொள்ளவேண்டியிருந்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து சேவையாற்றுபவர்கள், அதற்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்களுடன் நாம் பழகவேண்டும். திரு. கோகலே அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த மனிதர். இன்றைக்கு அவர் இறந்திருக்கலாம். ஆனால், அவருடைய எண்ணங்களும் உணர்வும் என்றென்றும் வாழும்.’
Add Comment