56. பணத்தேவையும் கணக்குத்தேவையும்
சென்னையில் காந்தி வரிசையாகப் பல கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புகளில் மூழ்கியிருந்த நேரம். அதே சென்னையின் வேறொரு பகுதியில் (மயிலாப்பூர்) தங்கியிருந்த வ.உ.சி.க்கும் அவருக்கும் இடையில் ஓர் உணர்ச்சிமயமான கடித உரையாடல் தொடங்கியது.
ரயில் நிலையத்தில் காந்தியைச் சந்தித்த வ.உ.சி., ‘நீங்கள் இங்கிருந்து கிளம்புவதற்குள் உங்களைத் தனிப்பட்டமுறையில் சந்தித்துப் பேச விரும்புகிறேன்’ என்று ஒரு கடிதம் எழுதினார். அதற்குக் காந்தி, ‘வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வந்தால் உங்களுக்காகச் சில நிமிடங்களை ஒதுக்க இயலும்’ என்று பதிலனுப்பினார்.
வ.உ.சி. காந்தியிடம் உரையாட விரும்பிய விஷயத்துக்குச் சில நிமிடங்கள் போதாது. அதைக் குறிப்பிட்டுப் பதிலெழுதிய வ.உ.சி., ‘நான் உங்களைச் சிரமப்படுத்த விரும்பவில்லை. உங்கள் நேரத்தில் குறுக்கிட்டதற்கு மன்னியுங்கள்’ என்று தன்னுடைய கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
‘பரவாயில்லை. நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று அவருக்குப் பதிலளித்தார் காந்தி. ‘வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை காலை 6 மணிக்கு நீங்கள் எனக்காகச் சில நிமிடங்களை ஒதுக்கமுடியுமா?’ என்று வ.உ.சி.யைக் கேட்டார் அவர்.
‘சில நிமிடங்கள் என்ன? நம் நாட்டின்மீது அன்பு கொண்டிருக்கும் உங்களைப் போன்றோருக்காக நான் என் வாழ்நாள்முழுவதையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்’ என்று காந்திக்குப் பதில் எழுதினார் வ.உ.சி., ‘ஆனால், என்னால் ஆறு மணிக்கு உங்களைச் சந்திக்க இயலாது. என் வீட்டிலிருந்து நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வருவதற்கான முதல் டிராம் வண்டி காலை 5:30க்குதான் புறப்படுகிறது. வேறு எந்தப் போக்குவரத்து முறையும் இப்போது எனக்குக் கட்டுப்படியாகாது. அதனால், நாம் ஆறரை மணிக்குச் சந்திக்கலாமா?’
Add Comment