97. பேச்சு வலை
ஜனவரி 2 அன்று, காந்தி சூரத் நகருக்கு வந்தார். அங்கு ஆரிய சமாஜம் அமைத்திருந்த கோயில் ஒன்றைத் திறந்துவைத்துப் பேசிய காந்தி, அந்தக் கோயிலும் அங்கு வழிபட வருகிறவர்களும் வளத்துடன் செழிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டார்.
அதே நாளில் காந்திக்கான வரவேற்புக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. ஆனால், காந்தி அதில் பேச மறுத்துவிட்டார், ‘இதுபோன்ற பேச்சுகளுக்கெல்லாம் காத்திருக்காமல் உங்கள் வேலையைச் செய்யுங்கள்!’
காந்தி பொதுக்கூட்டங்களையோ சொற்பொழிவுகளையோ இப்படி ஒதுக்குகிறவர் இல்லை. தன்னுடைய கருத்துகளை மக்களிடம் பரப்பும் வாய்ப்புகளாக அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதுதான் அவருடைய வழக்கம். எத்தனையோ ஊர்களில் மிக விரிவான உரைகளையெல்லாம் அவர் நிகழ்த்தியதுண்டு. எனினும், பேச்சைவிடச் செயல்தான் முதன்மையானது என்கிற எண்ணம் அவருக்குள் உறுதியாகப் பதிந்திருந்தது. ஒருவேளை, அன்றைய இந்தியர்களில் பெரும்பாலானோர் அரசியல், சமூக, பொருளாதாரத் தெளிவு பெற்றவர்களாக இருந்திருந்தால், அவர் எந்த மேடையிலும் ஏறாமல் தன்னுடைய தொண்டுப் பணிகளில்மட்டும் தீவிரமாக இறங்கியிருப்பார்!
அன்றைக்கு ஆரிய சமாஜத்தின் சார்பில் நடைபெற்ற இன்னொரு கூட்டத்தில் காந்தி இதைப்பற்றி மிக விரிவாகப் பேசினார். மேடை நிகழ்ச்சிகளைப்பற்றிய அவருடைய அன்றைய பார்வையை இதன்மூலம் நன்கு புரிந்துகொள்ளலாம்.
‘இன்று காலையிலும் மாலையிலுமாக நீங்கள் எனக்கு ஒன்றரை மணிநேரத்தைக் கொடுத்துப் பேசச் சொல்லியிருக்கிறீர்கள். என்னால் அவ்வளவு நேரமெல்லாம் பேசமுடியாது. அப்படியே பேசினாலும் என்னுடைய பேச்சை நீங்கள் முழுக்கப் புரிந்துகொள்வீர்கள் என்று சொல்வதற்கில்லை. அதனால், நான் இயன்றவரை சுருக்கமாகப் பேச விரும்புகிறேன். அதில் எனக்கு நல்ல அனுபவம் உண்டு!’ என்றார் காந்தி, ‘என்னை யார் பேச அழைத்தாலும் சரி, நான் இயன்றவரை சுருக்கமாகத்தான் பேசுவேன். இந்தப் பழக்கத்தை நான் தொடர்ந்து பின்பற்றப்போகிறேன்.’
Add Comment