கொழுகொழுவென இருப்பதால் கொழுக்கட்டை என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். மொழுமொழுவென இருப்பதால் திபெத்தியர்கள் அதற்கு மோமோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும். ஆவியில் அவித்த பண்டங்களை திபெத்திய மொழியில் மோமோ என்றே அழைப்பார்கள்.
பாட்டிமார்கள் சிறுகச்சிறுக காசை சேர்த்து வைக்கும் சுருக்குப்பை தெரியுமல்லவா? பொடிப்பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சுருக்குப்பைக்குள் போட்டு இறுக்கி மூடி, அதன் வாயை அகற்றியதைப் போலக் கமுக்கமாகத் தட்டில் அமர்ந்திருக்கும் இந்த மோமோக்கள். சூதுவாது அறியாத இவற்றுக்கு நாலும் சொல்லிக் கொடுக்க பூண்டு, தக்காளி சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் பக்கத்தில் வைத்திருப்பார்கள். காரம் சாப்பிட்டுப் பழகியிருக்காத குழந்தைகள் மோமோவை அப்படியே வாயில் போடலாம். விவரமறிந்த பெரியவர்கள் மோமோவின் ஓரத்தில் சட்னியைத் தொட்டு வாயில் போட வேண்டும்.
பூண்டின் காரமும், தக்காளியின் புளிப்புமாக முதலில் அந்த சட்னியின் சுவை நாக்கில் தெரியும். பிறகு அதன் காரம் மெல்ல மெல்லக் குறைந்து, மைதாவின் மென்மையோடிருக்கும் மோமோவின் மொழுமொழுப் பகுதியைக் கடிப்பீர்கள். சட்னியின் காரம் இந்நேரம் தீர்ந்து போயிருக்கும். இனி சின்னதாக நறுக்கிய வெங்காயம், கோஸ், பன்னீருடன் உப்பும் மிளகும் சேர்த்து அந்த மென்மையான பகுதியைச் சுவைப்பீர்கள். இப்போதுதான் மோமோவின் பூரணத்துவம் தெரிய வரும்.















Add Comment