கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.10. வாரத்தின் சிறந்த நாளாக முஸ்லிம் மக்கள் நினைக்கும் நாள் வெள்ளி. வாடிக்கையாகச் செய்யும் தொழுகையுடன் சேர்த்து, சிறப்புத் தொழுகைகளும் அன்று இருக்கும். மொராக்கோவின் மெரகேஷ் நகரத்தில் உள்ள பழம்பெரும் மதினாவாவிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உறங்கும் முன் செய்யப்படும் கடைசி தொழுகையான இஷா நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதினாவிற்கு வெளியே பழைமையான Jemaa el-Fna வணிக சதுக்கம். தெருவோர கடைகளில் ஜரூராக இரவுநேர வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அருகிலிருக்கும் தங்கும் விடுதியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் உறங்கச் செல்கிறார்.
திடீரென மசூதி ஆடத்தொடங்குகிறது. மெல்ல ஆரம்பித்து முன்னும் பின்னும் தென்னை மரம் போல வளைந்தது. தொழுது கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர். எங்கும் மக்கள் ஓலம். தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மசூதி சரிந்தது. ரிக்டர் அளவில் 6.8 வலுவான நிலநடுக்கம் எனப் பதிவானது.
மொராக்கோ, ஆப்பிரிக்கா கண்டத்தின் தலைப் பகுதியால் உள்ள ஒரு நாடு. பொருளாதார அடிப்படையில் ஆப்ரிக்காவின் ஐந்தாவது பெரிய நாடு. இந்நாட்டை முகமது VI என்னும் மன்னர் ஆண்டு வருகிறார்.
கடந்த 120 ஆண்டுகளில் இப்பகுதியில் இதுபோன்ற கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில்லை. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், இரண்டாயிரத்து ஐம்பத்தொன்பது பேர் காயமடைந்ததாகவும், ஆயிரத்து நானூற்று நான்கு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம். போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் நடுப்பகுதியை ஒட்டியுள்ள மலைக் கிராமங்களில் சேதம் மிகவும் அதிகம். சில கிராமங்கள் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அங்கெல்லாம் இன்னும் மீட்புப் பணிகள் தொடங்கவில்லை. உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
மீட்க முடியாத அழிவுகளில் ஒன்று உயிர்ப்பலி. மற்றொன்று பாரம்பரியம். அருமையான வரிகள் நந்தினி
இந்த இடத்தில் இரண்டு என்று வருமா வராதா ஒன்று மற்றொன்று என்று போட்டதால் டவுட்.