உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு உக்கிரமடைந்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி, அநேகமாக அனைத்து மேலை நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று, ரஷ்யாவின் அநியாய ஆக்கிரமிப்பைக் கண்டித்து வருவது உலகறியும். இந்தச் சூழ்நிலையில் எட்வர்ட் ஸ்நோடவுன் என்கிற ஓர் அமெரிக்க உளவாளி ரஷ்ய ராணுவத்துக்கு உதவி செய்யப் போயிருப்பதாக ஒரு வதந்தி வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க உளவாளி ரஷ்யாவுக்கு ஏன் உதவப் போனார் என்று ஆராயப் புகுந்தால் அது வேறு கதை. ஆனால் உளவுத் துறையில் டபுள் ஏஜெண்டாக இருந்து செத்தே போனவர்கள் பலர் உண்டு. இறுதி வரை அதை அறியாமலேயே பல நாடுகள் இருந்திருக்கின்றன. நடுவே தெரிய வந்து, ஒன்றும் செய்ய முடியாமல் திருடனுக்குத் தேள் கொட்டிய விதமாக விழித்த கதைகளும் பல உண்டு. இந்தக் கதையைப் பாருங்கள். இது சற்று வேறு விதம். உலகப் பிரசித்தி பெற்ற இஸ்ரேலிய உளவுத் துறையும் தனது உளவாளியைத் தேர்ந்தெடுப்பதில் சொதப்புமா? ஆள் யார் என்று சரியாகத் தெரிந்துகொள்ளாமல் ஆண்டுக் கணக்கில் வேலைக்கு வைத்து சம்பளம் கொடுத்திருக்குமா?
நம்ப முடியாத கதைதான். ஆனாலும் சுவாரசியமான கதை!
Add Comment