மழை என்ற சொல்லைக் கேட்டதும், அது நம்மை நோக்கித்தான் வருகிறதென்று பாய்ந்து ஓடிப் பதுங்குகிறோம்.
தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் புயல் ஒன்று மேற்கு வங்கம், ஒடிசா பக்கமாகப் போகிறது. இந்த வாரம் அதனால் மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்திலும் இருபது நாள்களுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ள நாள்களாகக் கணிக்கப்பட்டுள்ளன. வழக்கமில்லாத வழக்கமாக டிசம்பரில் பெருமழையை எதிர்பார்ப்பதும் சென்னைவாசிகளின் புதிய இயல்பாகிவிட்டது.
அரசாங்கம் மழையின் அளவு குறித்த தெளிவான அறிவிப்புகளை வெளியிடுகிறது. போதாக்குறைக்குத் தனியார் வானிலை வல்லுநர்களும் களத்தில் இருக்கிறார்கள். துணியைத் துவைத்துக் காயப்போடலமா? மேம்பாலத்தில் நிறுத்திய வாகனத்தை வீட்டுக்குக் கொண்டுவரலாமா? என்று தேவைக்கு மிஞ்சிய தகவல்களைக் கொடுக்கிறார்கள். தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நாமே கூட வானிலையைப் படித்து ஆராய்ந்து தெளியும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டன.
இதெல்லாம் நியாயமாக நம் வாழ்வை எளிதாக்க வேண்டும். கடந்த வார நிகழ்வுகள் அப்படியா இருந்தன? அரசு அறிவிப்பில் தெளிவாக ஒரு நாள் மட்டுமே அதிகன மழை பெய்யும் என்றிருந்தது. மூன்று நாள்கள் முன்பிருந்தே பால், ரொட்டி, பிஸ்கட் பாக்கெட்களுக்குத் தட்டுப்பாடு வரும் அளவுக்குக் கூட்டம் கடைகளில் முண்டியடித்தது.
Add Comment