ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்ததால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விக்கிரவாண்டியும் கிருஷ்ணகிரியும் அதிகம் பாதிக்கப்பட்டன.
அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்த பருவமழையும் ஒரே நாளில் பெய்துள்ளது. பதிநான்கு மாவட்டங்களில் சுமார் எழுபது லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாய நிலங்கள் வெகுவாகச் சேதமடைந்துள்ளன. இரண்டு லட்சம் ஹெக்டேருக்கு மேலான விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அரசு அதிகாரிகளும், முதல் நிலை உதவியாளர்களுமாகச் சுமார் இரண்டு லட்சம் பேரைக் களத்தில் இறக்கியிருக்கிறது அரசு. இரண்டரை கோடி இடைக்கால நிவாரணப் பணிகளுக்காகத் தேவைப்படுகிறது. மாநிலங்களுக்கான நிவாரண நிதியிலிருந்து இரண்டாயிரம் கோடியை உடனே தந்து உதவுமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.
Add Comment