வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் நடந்ததைச் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.
1992ம் ஆண்டு அது நடந்தது. சந்தனக் கட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அக்கிராமத்தில் வனத்துறை தேடுதல் வேட்டைக்குச் சென்றது. காவல் துறையினரும் உடன் இருக்க, அன்றைக்கு (ஜூன் 20ம் தேதி) அவர்கள் சந்தனக் கட்டைகளைக் கண்டுபிடித்தார்களா என்று தெரியாது. ஆனால் கிராமமே சர்வநாசம் ஆகும் அளவுக்கு துவம்சம் செய்துவிட்டார்கள். ஏராளமான அப்பாவி மக்கள் தாக்கப்பட்டது ஒரு புறம் என்றால், பதினெட்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார்கள். இறுதியில் சுமார் நூறு பேரை ஏதேதோ குற்றம் சொல்லிக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
மத்தியில் அப்போது நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தார். இங்கே ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சி அமைத்திருந்தார். மாநிலமே கொந்தளித்துக் கேள்வி எழுப்பியபோது ஆளும் கட்சி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளைக் காப்பாற்றத்தான் நினைத்தது. விவகாரம் பெரிதாகி, உச்சநீதி மன்றம் தலையிட்ட பின்புதான் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
Add Comment