காஸாவில் பொது மக்கள் என்று யாருமில்லை; அங்கிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள்தாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஊர் உலகத்துக்காக இதனை மேலோட்டமாகக் கண்டித்துவிட்டு இஸ்ரேலியப் பிரதமர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். உண்மையில் காஸாவில் இன்று நடந்துகொண்டிருக்கும் வெறியாட்டங்கள் அனைத்தின் பின்னணியிலும் உள்ள – அவர்கள் நம்பும் ‘சித்தாந்தம்’ இதுதான்.
இன்றைக்கு ஹமாஸ். நேற்று ஃபத்தா. பி.எல்.ஓ. உருவாவதற்கு முன்னர் வேறு எத்தனை எத்தனையோ உதிரி இயக்கங்கள். ஒரு மண்ணில் இடைவிடாமல் ஏன் ஆயுதப் போராட்டம் நடக்கிறது என்றால் அதன் அடிப்படை மேலே கண்ட இந்த மேலாதிக்க சக்திகளின் இன வெறுப்பும் இன ஒழிப்பு நடவடிக்கைகளும்தான்.
ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டது. ஹமாஸில் ஒருவர்கூட மிச்சமில்லாமல் ஒழித்துவிட்டுத்தான் போரை நிறுத்துவோம் என்று இஸ்ரேல் சொல்லியிருக்கிறது. ஆனால் அவர்கள் ஹமாஸைக் குறி வைப்பதாகத் தெரியவில்லை. நடப்பதையெல்லாம் பார்த்தால் மேற்படி அமைச்சர் சொன்னதைத்தான் சிரத்தையாகச் செய்துகொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. காஸா நகரம் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டுவிட்டது. அனைத்து வீடுகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அகதி முகாம்கள், சாலைகள் எல்லாம், எல்லாமே தரைமட்டம்.
Add Comment