முத்துப்பேட்டை சோமு பாஸ்கர், சுருக்கமாக எம் எஸ் பாஸ்கர். பார்க்கிங் என்ற தமிழ்ப் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணும், எம் எஸ் பாஸ்கரும் நடித்திருந்தார்கள். ஒரே ஒரு காரை மட்டும் பார்க் செய்யக்கூடிய வசதி இருக்கக்கூடிய ஒரு வீட்டில், அந்த இடத்திற்காக ஆரம்பிக்கும் சின்ன சண்டை எப்படிப் பெரிதாகிறது, இவர்கள் இருவரின் ஈகோ மோதல் இரண்டு குடும்பங்களையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பரபரப்பாகச் சொன்ன படம் இது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர் பாஸ்கர். நகைச்சுவை, குணச்சித்திரம், குடும்பஸ்தர், மாமா, அப்பா என எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் அதில் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர். குறிப்பாக ராதா மோகன், பிரகாஷ் ராஜ் திரைப்படங்களில் இவரது பாத்திரம் தனித்துத் தெரியும். ‘அவருக்காகவே நான் சில பாத்திரங்கள் எழுதுவது வழக்கம். மொழி, பயணம், காற்றின் மொழி உள்படப் பல படங்களில் இவருடைய பாத்திரங்களுக்கு இன்னொருவரை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது’ என்கிறார் ராதா மோகன். கமல் ஹாசனின் தசாவதாரம், உத்தம வில்லன், பாபநாசம் போன்ற படங்களில் இவர் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தில் கூடக் கௌரவமான, அதே சமயம் கறாரான வேடத்தில் நடித்துக் கைதட்டல் வாங்கியிருந்தார்.















Add Comment