‘பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தாக்குப் பிடித்து மரபணு திருத்தம் செய்யப்பட்ட இந்த நெல் ரகங்கள் விளையும். மற்ற ரகங்களைவிட முப்பது சதவிகிதம் கூடுதல் விளைச்சல் தரக் கூடியவை. தண்ணீர்ப் பற்றாக்குறை இந்த நெற்பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்காது. கரியமில வாயுவின் வெளியேற்றமும் குறைவாக இருக்கும்’ என்று இந்தியாவில் முதல்முறையாக மரபணுத் திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் டில்லியில் அறிமுகப்படுத்திப் பேசினார்.
இந்தியாவில் ஏற்கனவே சாகுபடி செய்யப்படும் சம்பா மசூரி, எம்டியு ஆகிய இரண்டிலிருந்தும் இந்தப் புதிய வகை நெல் ரகங்கள் மரபணுத் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. டிஆர்ஆர் தான் 100 (கமலா) DRR Dhan 100 (Kamla) , பூசா டிஎஸ்டி ரைஸ் 1 (Pusa DST Rice 1) என அவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR) மூலம் இந்த நெல் ரகங்கள் மரபணு திருத்தம் செய்யப்பட்டது. இந்த இரு நெல் ரகங்களும் இதற்கு முந்தைய ரகத்தைவிட இருபது நாள்கள் முன்பே அறுவடைக்குத் தயாராகிவிடும். அதாவது நூற்று முப்பது நாள்களில் இவை அறுவடைக்குத் தயாராகிவிடும்.
நெல் அதிகம் விளையும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, பீகார், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்களில் இந்த ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவை. இந்த நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய பாசன நீரும் குறைந்த அளவே செலவாகும்.














Add Comment