அறியப்படவேண்டிய, கொண்டாடப்படவேண்டிய சென்ற நூற்றாண்டுப் பெண் படைப்பாளிகள். அவர்களை விரிவாக அறிமுகப்படுத்துவதுதான் நாயகி நிகழ்ச்சியின் நோக்கம். இது, ஒருநாள் கருத்தரங்காக மயிலாப்பூரிலிருக்கும் கவிக்கோ மன்றத்தில் சென்ற சனிக்கிழமை (22, மார்ச்) நடந்தது.
தமிழின் முதல் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம், சுமார் பத்தாண்டுகள்வரை தன் வீட்டுக்குத் தெரியாமலே ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற பத்திரிக்கைகளில் எழுதிய குமுதினி, ஒரேயொரு முக்கியமான நாவலைப் படைத்த அழகியநாயகி அம்மாள் உள்ளிட்டப் பன்னிரண்டு படைப்பாளிகளை நாயகிகளாகத் தேர்வு செய்திருந்தனர். ஒவ்வொரு நாயகியைப் பற்றியும் ஒரு நிமிடக் குறும்படம், தொடர்ந்து அவரைப் பற்றி இரண்டு நபர்கள் பேசுவது என நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
செல்வேந்திரன், ஜா. தீபா, பாஸ்கர் சக்தி உள்ளிட்ட பேச்சாளர்களில் ஆரம்பித்து முதல்முறை மேடையேறிய தமிழ்பொன்னி வரையிலும் எல்லோருக்கும் இருபது நிமிடங்கள்தான். கால் மணி நேரம் கடந்துமே மொபைலில் டைமர் வைத்து பேசுபவர்களின் அருகில் நாசூக்காகக் கொண்டு வைத்தார் ஸீரோ டிகிரி வித்யா. ‘என்ன அதுக்குள்ள மணியடிக்கிறாங்க…’ என்று கேட்டாலும் யாரும் அரைமணிக்குமேல் பேசவில்லை. பத்தொன்பது நிமிடங்களுக்கு, தானே டைமர் வைத்துவிட்டதாகச் சொன்னார் பரிசல் கிருஷ்ணா.
Add Comment