வரும் இருபத்து நான்காம் தேதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து மூன்றாவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார் சூரியகாந்த். தற்போதைய தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய், இதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளார். அடுத்த பதினைந்து மாதங்களுக்குத் தலைமை நீதிபதிப் பதவியில் நீடிப்பார் சூரியகாந்த். கல்வியும் உழைப்பும் ஒருவரை எந்த உயரத்துக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்திலுள்ள பெத்வார் கிராமத்தில் 1962ஆம் ஆண்டு பிறந்தார் சூரியகாந்த். அப்பா, சமஸ்கிருத ஆசிரியர். நான்கு அண்ணன்கள், ஒரு அக்கா. இவர் கடைக்குட்டி. கல்வியே உயர்வதற்கான வழி என்ற அப்பாவின் வாக்கியத்தைச் சிறுவயதிலேயே நன்கு மனத்தில் இருத்திக்கொண்டார் சூரியகாந்த். பள்ளி, கல்லூரிப் படிப்புகளை உள்ளூரிலேயே பயின்றார். அதன்பின் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் LLB படிப்பு. படித்து முடித்த கையோடு, ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார்.
பிறகு பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். தொழிலில் அவர் பின்பற்றிய தர்மமும் கூர்மையான வாதங்களும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மத்தியில் இவருக்குப் பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்தன. அதன் பலனாக, ஹரியானாவின் இளம் அட்வகேட் ஜெனரல் என்ற பெருமையைப் பெற்றார் சூரியகாந்த். அப்போது அவரது வயது வெறும் முப்பத்தெட்டு. அடுத்த நான்காண்டுகளில் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் ஆனார். பதினான்கு ஆண்டுகள் நீதிபதியாக இருந்தபின், ஹிமாச்சல் பிரதேசத்தின் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். இதற்கிடையே தொலைநிலைக் கல்வி வழியே LLM பட்டமும் பெற்றார்.














Add Comment