இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் நிதிஷ்குமார் முதல் முறை பிகார் முதல்வராகப் பதவியேற்றார். பல ஆண்டுகள் காத்திருந்து நிறைவேறிய கனவு அது. ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. ஆர்ஜேடிக்கும் நிதிஷ் கூட்டணி எல்எல்ஏக்களுக்கும் இருந்த வித்தியாசம் ஒரு கை விரல் எண்ணிக்கைக்கும் குறைவே. இருதரப்புமே பெரும்பான்மை எண்ணை எட்டிப் பிடிக்கவில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் எட்டாம் நாள் பதவி விலகினார். பாதகம் ஒன்றும் இல்லை. எட்டு முறை முதல்வர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்ற சாதனைக் கணக்கு தொடங்கியது அங்கேதான்.
பிகார் முதல்வராகக் குறைந்த நாள்கள் இருந்தவர் நிதிஷ் அல்ல. 5 நாள் முதல்வர் கூட உண்டு. மாறி மாறிப் பதவிப்பிரமாணம் எடுக்கும் காட்சிகளை 23 முறை கண்டிருக்கிறது பிகார் மாநிலம். ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்த காலங்கள் தனிக் கணக்கு. ஒரு வருடம்கூடத் தாக்குப் பிடிக்காத ஆட்சிகளே பத்துக்கும் மேல். பிகார் மாநிலத்தின் நிலையற்ற எண்ணிக்கை அரசியலை இந்த எண்களே புரிய வைத்துவிடும்.
Add Comment