16. வொட்டகமண்ட்
வொட்டகமண்ட் என்பது ஆங்கிலேயரின் வாயில் நெரிபட்ட, தோடர்கள் அல்லது படுகர்கள் புழங்கிய ஒரு வார்த்தை என்பதைத் தனியாக விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அது சல்லிவன் குழுவினருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் நாவில் நுழையாத சொல்லாக, வொட்டகமண்ட் என்றே பதிந்து போயிற்று. எத்தனை திருத்தமாகச் சொன்னாலும் ஆங்கில நாவுக்கு அது போய்ச்சேராது என்பதால், அவர்கள் சொல்லும்படியே இருக்கட்டும் என்று உள்ளூரிலும் விட்டுவிட்டனர். கடைசி பிரிட்டிஷ் ஆவணம் வரையிலும் அந்த வார்த்தை அப்படியே அரைபட்டது.
இந்த ஆங்கில வார்த்தைக்கான அசல் சொல்லைப் பற்றி மூன்று விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று, அது படுகு மொழியின் ஆதிச்சொல். இரண்டாவது, அது தோடர்களின் மொழியில் அமைந்தது. மூன்றாவது, இரண்டுமே இல்லை, அது தமிழ்ச்சொல்தான் என்று அடித்துவிடும் கதை ஒன்றும் எண்பதுகளுக்குப் பின்னால் பரப்பப்பட்டது.
தமிழில் உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்பது வட்டாரம், பிரதேசம் முதலிய இடங்களைக் குறிக்கும் சொல். ஆகவே இது தமிழ்ச்சொல்தான் என்பது அவர்களின் வாதம். இது உடனடியாகவே வரலாற்றாய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் மலையேறி வந்தபோது இங்கு இரண்டு பூர்வகுடியினர்தான் இருந்தார்கள். ஆகவே தமிழ்ச்சொல் ஒன்று அவ்வூரின் பெயராக அமைந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவர்களின் கருத்து. கூடவே, அப்படியே தமிழ்ப்பெயர் வைத்து அழைத்திருந்தாலும் பனி மண்டலம், மேக மண்டலம் என்றெல்லாம் வைத்திருக்கலாமே தவிர உதகம் என்று தண்ணீரைக் கொண்டுவர அவசியமில்லை என்பது அவர்களின் வாதம்.














Add Comment