அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தங்களை உருவாக்குவது, அணு ஆயுதச் சோதனை நடத்தும் நாடுகளின் மேல் பொருளாதாரத் தடைகளை விதிப்பது, போர்களை நடத்துவது என அமெரிக்கா மூக்கை நுழைக்காத நாடுகள் குறைவு. இந்தப் பட்டியலில் நீண்ட நாள்களாக இருந்துவரும் நாடு ஈரான். ‘அவர்கள் கிட்டத்தட்ட அணு ஆயுதத்தைத் தயாரித்துவிட்டார்கள்’ என அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜி-7 மாநாட்டிலிருந்து பாதியில் கிளம்பிவந்து சொல்லுமளவுக்கு இந்தப் பிரச்சனை இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய ‘கிட்டத்தட்ட’ என்ற வார்த்தைக்கு அறிவியல் ரீதியாக விடை தேடுவோம். பூந்தியுடன் முந்திரி, ஏலக்காய் கலந்து லட்டு பிடிக்கிறோம். இதேபோல புரோட்டான் எனும் முந்திரியும், நியூட்ரான் எனும் ஏலக்காயும் இணைந்து அணுக்கருவை உருவாக்குகின்றன. இவற்றை பிணைத்துவைக்கும் பூந்தியாக அணுக்கரு விசை செயல்படுகிறது. ஒவ்வொரு லட்டிலும் சம எண்ணிக்கையிலான முந்திரியும், வெவ்வேறு எண்ணிக்கையிலான ஏலக்காயும் இருப்பதாகக் கொள்வோம். ஏலக்காயின் எண்ணிக்கை மாறுபாட்டால் ஒவ்வொரு லட்டும் மாறுபட்ட மணமும், சுவையும் கொண்டிருக்கும் அல்லவா? இதேபோல இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தில் ஒரே அளவிலான புரோட்டானும், வெவ்வேறு அளவிலான நியூட்ரானும் கொண்ட மூன்று வகையான அணுக்கள் சேர்ந்துள்ளன. இவற்றை ஐசோடோப்புகள் என்கிறார்கள்.
யுரேனியத்தில் U-238 என்ற ஐசோடோப் மிக அதிக அளவிலும் (99.27%), U-235 குறைந்த அளவிலும் (0.72%), U-234 மிக மிக குறைந்த அளவிலும் (0.0055%) உள்ளன. இவற்றில் U-235 மட்டுமே அணுப்பிளவுக்கு உள்ளாகும். அதாவது, ஒரு நியூட்ரான் கொண்டு U-235 அணுவைத் தாக்கினால், அந்த அணு பிளந்து, அதிக ஆற்றலையும், புதிய நியூட்ரான்களையும் வெளியிடும். இந்த நியூட்ரான்கள் மற்ற U-235 அணுக்களைத் தாக்கி ஒரு தொடர் வினையை (Chain Reaction) உருவாக்கும். இதில் மிகப்பெரிய அளவில் ஆற்றல் வெளிப்பட்டு பேரழிவை ஏற்படுத்தும். இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தில் வெறும் 0.72% மட்டுமே இருக்கும் இந்த U-235 ஐசோடோப்பை அதிகப்படுத்தும் செயல்முறையை ‘யுரேனியம் செறிவூட்டல்’ என்கிறார்கள். அணு உலைகளில் மின் உற்பத்திக்கு இது 3-6% செறிவூட்டப்பட்டால் போதுமானது. 90% வரை செறிவூட்டப்பட்டால் அது ஆயுதத் தர (Weapon Grade) யுரேனியமாகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்ட ‘கிட்டத்தட்ட’ என்பது இதுதான்.















Add Comment