56 அவரவர் உலகம்
‘எப்பவுமே ஆர்க்யுமெண்ட்ல ஜெயிக்கிறது அப்படி ஒண்ணும் முக்கியமில்லே’ என்று எம்கேஎஸ் சொன்னது மறுநாள் காலை ஆபீசில் உட்கார்ந்திருக்கையிலும் உள்ளே எதிரொலித்துக்கொண்டு இருந்தது.
அவருக்கு நவீன இலக்கியம் தெரியாது; ஐன்ஸ்டீன்வரை பேசினாலும் பெரியாரிஸ்ட் நாத்திகர்; தன்னிடம் அன்பாக இருக்கிறார் என்பதைத்தாண்டி அவர் அவனிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனால் பட்டென்று எப்படி ஒரே வாக்கியத்தில் யோசிக்காமல் அடித்துவிட்டார் என்று நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது.
இதற்கு அனுபவம் காரணமா அல்லது நமக்கு எண்ணிப்பார்க்கத் தோன்றாத முற்றிலும் வேறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் பளிச்சென்று பறக்கிற பொறியா. யோசனை சிந்தனை எல்லாமே பெரும்பாலும் படித்ததன் நீட்சியாகவோ, யாரோ எங்கோ சொல்லக் கேட்டதன் விளைவாகவோ உருவாவதுதானே. ஒத்த படிப்பறிவு உள்ளவர்களிலேயேகூட ஒருவருக்குத் தோன்றுவது, கூடவே இருக்கிற இன்னொருவருக்கு தோன்றாமல், அட என்று ஆச்சரியப்படும்படியாக சமயத்தில் அமைந்துவிடுகிறதே. எதிரும்புதிருமான எல்லா கருத்துக்களும் நமக்கே தோன்றவேண்டும் என்பதுகூட ஒருவேளை சிறுபிள்ளைத்தனமான நம் பேராசைதானோ அல்லது,
‘மகாபாரத்துல எத்தனைவிதமான வித்தியாசமான எதிரெதிரான கேரெக்டர்ஸ் இருக்கு. ஆனா எதுலையாவது வியாசன் தெரியிறானா’ என்று வண்ணநிலவன் அடிக்கடி சொல்வதால் உண்டான தாக்கமா என்றும் அவனுக்குத் தோன்றியது.
Add Comment