100 பாவாடை நிழலுக்குள்
‘நம்ப எஸ். வைத்தீஸ்வரனோட டாட்டர் சத்யாவோட கிளாஸ்மேட்டாம்பா’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுக் குழந்தைபோலச் சிரித்தான், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மாதிரியே, புருவக்கூடலுக்குக் கீழே எல்லோரையும்போல பள்ளம் ஆகாமல், நேராகக் கோடிழுத்தாற்போல இறங்கும் தீர்க்கமான நாசி வாய்க்கப்பெற்ற ஷங்கர் ராமன்.
எஸ். வைத்தீஸ்வரனைப் பார்க்க சத்யாவுடன் போனபோது பரவசத்துடன் திக்கித் திணறி அவள் சொன்னதைத் திரட்டிச் சேர்த்தால் அது இப்படி வரக்கூடும்.
இவன் எழுத ஆரம்பித்த புதிதில், இந்தப் பையன் அபரிமித இலக்கிய ஆர்வத்துடன் இருக்கிறானே என்கிற பாராட்டுணர்வுடன், கேட்காமல் அவராகவே கையெழுத்துப் போட்டுக் கொடுத்த, அசோகமித்திரனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘இன்னும் சில நாட்கள்’ இவனிடமிருந்து ஷங்கர் ராமன் கைக்குப் போய் அவனிடமிருந்து சத்யா கைக்குப் போயிருந்தது.
மனதுக்குப் பிடித்ததைக் கூடவே வைத்திருப்பதும் அடுத்தவர் பார்வையில் படும்படி போகுமிடமெல்லாம் குழந்தையைப்போல அதைத் தூக்கிக்கொண்டே திரிவதும் வயது வித்தியாசமின்றி எல்லோருமே செய்வதுதானே. வாசிப்பவனுக்கு, தனக்குப் பிடித்த இலக்கியப் புத்தகம் என்பது, அச்சடித்தப் பக்கங்களுக்கு அட்டை போட்டு இருக்கிற வஸ்து இல்லை. வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிற சிநேகிதன். இவன் என் சிநேகிதன், சிநேகிதி என்று நாலு பேரிடம் காட்டிக்கொள்ளாதமாதிரி காட்டிக்கொள்ளாவிட்டால் அந்த சிநேகிதத்துக்கு என்னதான் அர்த்தம்.
குயின் மேரீஸில் படித்துக்கொண்டிருந்த சத்யா, வகுப்பறை மேஜை மீது வைத்திருந்த பாடப்புத்தகங்களின் மேல் இன்னும் சில நாட்களை வைத்திருந்திருக்கிறாள்.
‘ஏ இந்த புக்கு எங்க வீட்லகூட இருக்கு’ என்றிருக்கிறாள் பக்கத்தில் அமர்ந்திருப்பவள்.
‘அட! இதெல்லாம் எல்லாரும் படிக்கிற புஸ்தகமில்லையே. அப்ப உங்க வீட்லையும் நல்ல லிட்டரரி டேஸ்ட் இருக்கறவங்க இருக்காங்கனு சொல்லு.’
‘ஆமா. எங்க அப்பாதான். அவர் கவிதையெல்லாம் எழுதுவாரு.’
Add Comment