மெட்ராஸில் இருந்த அந்த சில நாட்களில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து டிரைவ் இன் வந்து காலையில் பொங்கல் வடை தின்றதிலிருந்து அந்த நிமிஷம் வரை என்ன நடந்ததென்று எஸ்விஆர் வீட்டு மொட்டை மாடியில், அவருடன் உலாத்தியபடி ஆதியோடந்தமாய் சுவாரசியமாய் சொல்லிக்கொண்டிருந்தான். அவருக்கும் அது சுவாரசியமாய்தான் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், வழக்கமாக அவன் பேச ஆரம்பித்த கொஞ்சநேரத்திலேயே சரித்திரம் பூகோளம் என தன் கச்சேரியை ஆரம்பித்துவிடுகிற எஸ்விஆர், அன்று குறுக்கிடாமல், ரசிக்கிறார் என்பது வெளிப்படையாய் தெரியும்படி இடத்திற்குத் தகுந்தார்போல் முறுவலித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். ஒருவேளை, அவன் பேசியதைக் கடனெழவே என்று அவர் கேட்டுக்கொண்டு இருந்திருந்தாலும் அவன் அதை சட்டையே செய்யாமல் பேசிக்கொண்டேதான் இருந்திருப்பான் என்பது வேறு விஷயம். தான், தனது சந்தோஷம், தனக்குப் பிடித்தது, தனக்குப் பிடிக்காதது என்று தன் உலகில் மட்டுமே சதாகாலமும் வாழ்ந்துகொண்டு இருக்கிற அவனிடம்போய், அவ்வப்போதாவது அடுத்தவர்களையும் கணக்கிலெடுத்துக்கொள்வதுதான் தர்மம் என்று எடுத்துச்சொல்லி, அதை அவன் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லைதானே.
Add Comment