144. ஜனாதிபதி தேர்தல் 1969
பிரதமர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாயை துணைப் பிரதமராக்கி, அவர் கையில் நிதி அமைச்சகத்தை ஒப்படைத்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.
சமயம் கிடைக்கும்போதெல்லாம் மொரார்ஜி பாய், இந்திரா காந்தியை கிண்டல் அடிக்கவும், தான் அவரை விட மூத்த அரசியல் அனுபவசாலி என்பதைக் காட்டிக் கொள்ளவும் தயங்கியதே இல்லை.
உதாரணமாக, திட்டக் கமிஷனின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அவர்கள் இருவருமே பங்கேற்றனர். அப்போது ஒரு முக்கியமான விஷயம் குறித்த விவாதத்தின்போது, மொரார்ஜி அசால்டாக, “இந்திரா தங்கச்சியே! உனக்கு இது புரியாது! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்றதும், இந்திராவுக்கு அசாத்தியமான கோபம் வந்துவிட்டது. ஆனாலும், அதை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டு அமைதி காத்தார்.
அப்படிப்பட்ட மொரார்ஜி, இந்திரா காந்தி அதிரடியாக வங்கிகளை நாட்டுடைமை ஆக்கும் இந்திராவின் திட்டத்துக்கு உடனடியாக சம்மதிப்பாரா என்ன?
ஆனால், அரசியல் ரீதியாக இந்திரா காந்திக்கு அப்படி ஓர் அதிரடி முடிவு அவசியமாக இருந்தது. காரணம், காங்கிரஸ் கட்சியின் சிண்டிகேட் தலைவர்களுக்கு எதிராக தன் ஆளுமையை உயர்த்திக் காட்ட அவர் விரும்பினார்.
Add Comment