70. பொம்மை தியாகம்
கமலா நேரு மரணம் அடைந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் பத்திரிகையாளர், இந்திராவிடம், “உங்கள் தாயின் மறைவினால் ஏற்பட்ட சோகத்தின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு உங்களுக்கு நீண்ட காலம் பிடித்ததா?” என்று கேட்டபோது, இந்திராவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை.
ஆழ்ந்த பெருமூச்சுக்குப் பின், “எனக்குத் தெரியவில்லை! அது போன்ற ஆழமான சோகங்களில் இருந்தெல்லாம் மீண்டு வருவது சாத்தியமில்லை; அது ஆறாத வடு போன்றது; மனதில் மீண்டும், மீண்டும் வந்து கொண்டேதான் இருக்கும். என் அம்மாவை அடிக்கடி என் மனம் நினைத்துக் கொள்கிறது!” என்று பதிலளித்தார்.
கமலா நேருவின் மரணத்தை அடுத்து, ஜவஹர்லால் நேரு, தன் மனைவியுடனான நினைவுகளில் மூழ்கிப் போனார். தனது சுய சரிதைப் புத்தகம் (இன்றைய ‘ரேண்டம் ஹவுஸ்’ என்ற பதிப்பகத்தின் ரிஷிமூலமான) ‘போட்லி ஹெட்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டபோது, அந்தப் புத்தகத்தை கமலா நேருவுக்குச் சமர்ப்பணம் செய்தார். கமலா நேருவின் மரணச்செய்தி, அகில இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு தரப்பினரும் தந்தி மூலமாகவும், கடிதம் வாயிலாகவும் தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்தார்கள்.
Add Comment