ஹோ…சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன். ஹோ…சானா சாவுக்கும் பக்கம் நின்றேன். ஹோ…சானா ஏனென்றால் காதல் என்றேன். இப்படியெல்லாம் உங்கள் காதலைச் சொல்லக் கவிதை போன்ற ஓரிடம் உண்டென்றால், அது இத்தாலி தான். அதன் குட்டித்தீவுகளில் உங்களுக்கென்ற ஒரு சொந்த வீடு வாங்க, ஒரு யூரோ போதும். ஆமாம், எண்பத்து ஒன்பது ரூபாய் மட்டுமே. அங்கே ஜிஎஸ்டி இல்லை, அவர்கள் நாட்டு வரி உண்டு. தூரமும் அதிகமில்லை. சென்னையிலிருந்து மத்திய கிழக்கு வழியே பறந்து, அரை நாளில் உங்கள் கனவு இல்லத்தை அடைந்து விடலாம்.
உலகின் அழகிய நாடுகளில் ஒன்று இத்தாலி. அழகிய கடற்கரைகளோடு, பல வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கொண்டது. கட்டடக்கலை, கலாசாரம், கலை, இலக்கியம், ஓபரா எனப் பலவற்றுக்கும் பெயர்பெற்ற ஐரோப்பாவின் பணக்கார நாடும் கூட. வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைகளில் கோலோச்சும் இத்தாலியின், சுற்றுலாத் துறையும் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கிறது. மிதக்கும் நகரமான வெனிஸ், லியோனார்டோ டா வின்சி, மைக்கேலேஞ்சலோ போன்ற மேதைகளின் ஓவியங்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான ரோம் நகரம் என்ற பல பெருமைகளைக் கொண்டிருக்கிறது இத்தாலி.
முதலாளித்துவ அரசின் நற்குணங்களுக்கு ஏற்ப இத்தாலியின் பொருளாதாரமும், வேலை வாய்ப்பும் அதன் முக்கிய நகரங்களில் மட்டுமே வியாபித்திருக்கின்றன. இளைய தலைமுறையினர் பிழைப்பு நடத்தச் சொந்தக் கிராமங்களை விட்டு இந்நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அங்கு எஞ்சியிருப்பன கைவிடப்பட்ட முதியோர்களும், வீடுகளும் மட்டுமே. இவர்கள் இருவரையும் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமே, இந்த ஒரு யூரோ வீடுகள்.
Add Comment