நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு ஆயத்தமாகி வருகிறது. 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென பாஜக நினைக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு 1951 மற்றும் 1952ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த நிலை 1967ஆம் ஆண்டுவரை நீடித்தது. அதன்பிறகு பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் இந்த முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. சில புதிய மாநிலங்கள் உருவாகின. இதனால் மத்தியிலும் மாநிலத்திலும் தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போதிருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே பதினேழு கோடி தான். இப்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறு கோடி.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு நாற்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. 2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இதனைச் சேர்த்திருந்தது பாஜக. மூன்றாவது முறை மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பாஜக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னெப்போதையும்விட அதிகமாகத் தீவிரம் காட்டி வருகிறது.
நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடு இது. மொத்த மக்களவைத் தொகுதிகள் 543. அனைத்து மாநிலங்களுக்குமான சட்டமன்றத் தொகுதிகள் 4120. இவைதவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் முப்பது லட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்றன.
Add Comment