அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அக்காட்சியைப் பார்த்த எங்களால் அவரைக் கடந்து செல்ல முடியவில்லை. அம்முதியவர் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இடம் துபாய் எக்ஸ்போ, பாலஸ்தீன பெவிலியன் (palesthine pavillian). அந்த பெவிலியனின் உள்ளே தரையில் பதித்திருந்த கற்களைத் தான் தொட்டுத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு இருந்தார் அவர். அவருடன் வந்திருந்த பெண் அம்முதியவரின் முதுகை தடவிக் கொடுத்துக் கொண்டே அரபிய மொழியில் மெதுவாக ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தாள். பாஷை தெரியாத போதும் அவை ஆறுதல் வார்த்தைகள் என்று புரிந்தது.
பாலஸ்தீன பெவிலியனினுக்குள் நுழைந்த அடுத்த நொடி நாம் பாலஸ்தீனத்தில் இருப்பது போன்றே தான் உணர்வோம். அப்படி ஒரு வடிவமைப்பு. பாலஸ்தீனத் தெருக்களில் எந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறதோ அதே கற்களைத் துபாய் வரை எடுத்து வந்து பாலஸ்தீன பெவிலியனின் அரங்கின் உள்ளே பதித்திருந்தார்கள்.
Add Comment