கோடைவந்தால் புதிய புதிய குளிர்பானக் கடைகள் முளைத்துவிடும். ஆனல் உடலுக்கு நன்மை பயப்பவை இயற்கைப் பானங்களே. ஒரு இயற்கைப் பானத்திற்கு முன்னால் ஆயிரம் செயற்கைப் பானங்கள் நின்றாலும் பயனில்லை. அதுவும் பதநீர் போன்ற பானங்கள் வெயிலைத் தணிப்பதற்கு இயற்கை கொடுத்த கொடை. கடலூர் வெள்ளிக் கடற்கரைக்கு 500 மீட்டர் முன்பாக கடற்கரைச் சாலையில் ஒரு பனைபொருள் பயிற்சிக் கல்லூரி இருக்கிறது. தற்போது பயிற்சிகள் ஏதும் நடைபெறவில்லை என்றாலும் பதநீரை இறக்குவதும் விற்பதும் அமோகமாக நடக்கிறது. பதநீர் பற்றித் தெரிந்துகொள்ள மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தின் முதல்வர் கணபதியுடன் உரையாடினோம்.
1948-ஆம் ஆண்டு மத்திய அரசு முதன்முதலில் கர்னாடகாவில்தான் இப்பயிற்சி நிலையத்தைத் தொடங்கியது. 1955-இல் கடலூருக்கு வந்தது. அதன்பிறகு மஹாராஷ்டிராவிற்கு மாற்றினார்கள். பனைத் தொழிலில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு என்பதால் மீண்டும் கடலூருக்கே கொண்டுவந்தனர்.
முனைந்து செயல்பட்டால் வேலை வாய்ப்பை அளிக்கும் தொழில்.அரசு ஏன் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று புரியவில்லை. மரம் ஏறுவதற்கான இயந்திரங்கள் வந்து விட்டன. பாதுகாப்பானது, சுலபமானது. மது விலக்கு என்பது நடவாத ஒன்று என்பதை நாடே அறியும் என்பதால் கள் இறக்குவதுகூட பெரிய குற்றம் இல்லை என்றே தோன்றுகிறது.