16. வழி மேல் வழி வைத்து…
முன்பெல்லாம் கைக் கடிகாரம் என்றால் ஒருவருக்கு ஒன்றுதான். ஆனால் இன்றைக்கு, ஒரே நபர் ஐந்தாறு கடிகாரங்கள் வாங்கி வைத்துக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்பக் கட்டுவது வழக்கமாகிவிட்டது.
இன்னும் சிலர் கடிகாரங்களை முதலீடாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, இவர்கள் கையில் கட்டி மணி பார்ப்பதற்கென்று கடிகாரங்களை வாங்குவதில்லை, அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கி, பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் அவற்றின் மதிப்பு கூடியதும் கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கிறார்கள்.
காலணிகளும் அப்படித்தான். வெளியில் நடக்கும்போது காலில் கல்லோ முள்ளோ குத்தாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தலா ஒரு ஜோடிக் காலணிகள் வாங்கியதெல்லாம் பழைய வரலாறாகிவிட்டது. இன்றைய மக்கள் நடப்பதற்கு ஒன்று, ஓடுவதற்கு ஒன்று, உடற்பயிற்சிக்கு ஒன்று, அலுவலகத்துக்கு ஒன்று, விழாக்களுக்கு ஒன்று என்று விதவிதமாக வாங்கிக் குவிக்கிறார்கள்.
இதுபோல் காலத்தோடு மாறியிருக்கிற இன்னொரு விஷயம், வருமானம்.
ஆம், ஒற்றை வருமானம் ஒருவரை, சொல்லப்போனால் அவருடைய குடும்பம் முழுவதையும் காப்பாற்றிய கதையெல்லாம் இனிமேல் நடக்காது. இன்றைக்கு ஒரே நபர் நான்கைந்து வழிகளில் வருமானம் பார்ப்பது இயல்பாகிவிட்டது. சொல்லப்போனால், கட்டாயமாகிவிட்டது.
Add Comment