28. தேவைகள், விருப்பங்கள்
இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி ஏமாந்துவிடாதீர்கள்’ என்று புதியவர்களைக் கையைப் பிடித்து இழுப்பார்கள்.
நாம் சம்பாதிக்கும் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்பதிலும் இதுபோல் இரண்டு கட்சிகள் உண்டு. முதல் கட்சியினர் நன்கு சம்பாதித்து, நன்கு செலவழிக்கவேண்டும், வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்பார்கள். இரண்டாவது கட்சியினர் இப்போது கண்டபடி செலவு செய்தால் பின்னால் கஷ்டப்படுவீர்கள், அதனால் ஒவ்வொரு செலவையும் யோசித்துச் செய்யுங்கள், மிகவும் தேவையானவற்றுக்குமட்டும்தான் பர்ஸைத் திறக்கவேண்டும் என்பார்கள்.
வழக்கம்போல், இந்த இரண்டு கட்சிகளுக்கும் நடுவில்தான் உண்மை இருக்கிறது. அதாவது, வருகிற பணமெல்லாம் செலவழிக்கத்தான் என்று விருப்பம்போல் அள்ளி வீசுவதும் கூடாது, மொத்தப் பணத்தையும் வங்கியிலோ மற்ற முதலீடுகளிலோ ஒளித்துவைத்துவிட்டு அன்றாடச் செலவுகளில் கஞ்சத்தனம் பார்த்துக் கஷ்டப்படவும் கூடாது. இந்த இரண்டுக்கும் இடையில் சரியான சமநிலையைக் கண்டுபிடிக்கவேண்டும்.














Add Comment