29. நம்முடைய காரணம் என்ன?
பூங்காவில் மாலை நடையின்போது நான் அடிக்கடி சந்திக்கிற நண்பர் அவர். பெரிய வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்றுகிறார். வருவாய் அடிப்படையில் பார்த்தால், உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்.
ஒருநாள், அவருடைய மகன் அவரிடம் வந்து, தயங்கித் தயங்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறான், ‘அப்பா, என் க்ளாஸ்ல மத்த பசங்க எல்லாரும் தனி வீட்டுல இருக்காங்க. நாம மட்டும்தான் அபார்ட்மென்ட்ல இருக்கோம். அது ஏன்? நாம ஏழைங்களா?’
இவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது, ‘மகனே, நாம ஏழைங்க இல்லை. இப்ப நாம இருக்கிற இந்த வீட்டோட விலையே ஒன்றரைக் கோடி ரூபாய் இருக்கும்.’
‘அப்ப, அவங்க வீடு?’
‘அதெல்லாம் ஏழெட்டு கோடி ரூபாய் இருக்கும்.’
‘நம்மால அந்தமாதிரி ஒரு வீடு வாங்கமுடியாதா?’
நாமெல்லாம் சிறுவயதில் இப்படிக் கேட்டிருந்தால் நம்முடைய பெற்றோர் முதுகில் ஒரு சாத்து சாத்தித் துரத்திவிட்டிருப்பார்கள். இவர் நிறையப் படித்தவர், பிள்ளைகளைத் தோழர்களாக நடத்தவேண்டும், சிறுவயதிலிருந்தே அவர்களுக்குப் பண விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும் என்று நினைக்கிறவர். அதனால், இந்தப் புதிருக்கான விடையை அவனுக்குப் புரியும்படி விளக்கியிருக்கிறார்.
Add Comment