38. சேமிப்பும் முதலீடும்
அன்றைய அரசர்கள் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கருவூலம் என்கிற இடத்தில் நிரப்பிவைத்தார்கள். அதன்பிறகு, தேவை உள்ளபோது அதிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துச் செலவழித்தார்கள்.
கருவூலம் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய, பாதுகாப்பு நிறைந்த அறைதான். பின்னாட்களில் அந்த இடத்தைப் ‘பணப்பெட்டி’ எடுத்துக்கொண்டது. அதன்பிறகு, அந்த இடத்தை ‘வங்கிக் கணக்கு’ எடுத்துக்கொண்டிருக்கிறது.
வங்கிக் கணக்குக்கும் கருவூலத்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. வங்கியில் போட்ட பணம் மெதுவாக வளர்ந்துகொண்டிருக்கும். ஆனால், கருவூலத்தில் போட்ட பணம் அப்படியேதான் இருக்கும், வளராது, தேயாது.
அதனால், நம்முடைய செலவுகளெல்லாம் போகக் கையில் இருக்கும் பணத்தை ஓர் அறையிலோ, பெட்டியிலோ, படுக்கைக்கு அடியிலோ நிரப்பிவைப்பதைவிட, அதை வங்கியில் போடுவது சிறந்தது. வங்கிக்காரர்கள் அந்தப் பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வட்டியாகக் கொடுப்பார்கள். பின்னர் நமக்கு ஒரு பணத்தேவை வரும்போது அந்த அசலையோ, வட்டியையோ, இரண்டையுமோ எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Add Comment