44. முதலீட்டு வாசல்
உலகெங்கும் பெரும்பாலான மக்கள் நிதி உலகத்துக்கு முறையாக அறிமுகமாவது வங்கிகளின்மூலம்தான். அநேகமாக நம் எல்லாருடைய முதல் முதலீட்டு அனுபவம் நம் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கு, அதில் சில, பல ரூபாய்கள் என்றுதான் தொடங்கியிருக்கும்.
உண்மையில், ‘சேமிப்பு’க் கணக்கு என்ற பெயரே அது ஒரு முதலீட்டு வழி இல்லை என்பதைத் தெளிவாக்கிவிடுகிறது. அதாவது, நாம் இங்கு பணத்தைச் சேமித்துவைக்கலாம், அதன்மூலம் சிறிது வருவாய் (வட்டி) சம்பாதிக்கலாம். ஆனால், அந்த வருவாய் ஆண்டுதோறும் வருகிற பணவீக்கத்தை ஈடுகட்டக்கூடப் போதாது. அதனால், சேமிப்புக் கணக்கில் நம் பணம் வளராது, தேயும்.
ஆக, தன்னுடைய வருங்காலத் தேவைகளுக்காகப் பணம் சேமித்து, அதை ஆண்டுக்கு ஆண்டு போதுமான விகிதத்தில் வளர்க்கவும் விரும்புகிற ஒருவர் அதற்குச் சேமிப்புக் கணக்குகளை நம்பியிருக்க இயலாது, மற்ற முதலீட்டு வழிகளைத்தான் நாடவேண்டும்.
அதே நேரம், நாம் சேமிப்புக் கணக்குகளை முழுமையாகப் புறக்கணித்துவிடவும் இயலாது. ஏனெனில், மற்ற பல பயனுள்ள முதலீட்டு வழிகளுக்கு இதுதான் வாசலாக அமைகிறது.
Add Comment