49. பங்குக் கொத்து
பங்குச் சந்தை முதலீடு தொலைநோக்கில் நல்ல பலன்களைத் தரக்கூடியது. ஆனால், அதில் நேரடியாக இறங்குவதற்கு மிகுந்த உழைப்பும் நேரமும் தேவை. சந்தையை, உள்நாட்டு, உலக அரசியலை, தொழில்துறை மாற்றங்களை, மக்களுடைய பொதுவான உணர்வுநிலைகளையெல்லாம் தொடர்ச்சியாகக் கவனிக்கவேண்டும். சரியான நிறுவனங்களில், சரியான நேரத்தில், சரியான விலையில் முதலீடு செய்யவேண்டும். பின்னர் ஒருவேளை அவை மோசமான நிலைக்குச் செல்லத் தொடங்கினால் அதைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றிலிருந்து விலகவேண்டும். அவ்வாறன்றி வேறு காரணங்களால் சந்தை விழும்போது பதற்றப்பட்டுக் கையிலிருப்பதையெல்லாம் விற்றுவிடக்கூடாது. ஒரு நிறுவனத்திலோ, ஒரு குழுமத்திலோ, ஒரு குறிப்பிட்ட வகைப் பங்குகளிலோ, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியிலோ, ஒரு குறிப்பிட்ட தொழில்துறையிலோ நம்முடைய முதலீடுகள் மிகுதியாகச் சேர்ந்துவிட்டால் தோட்டக்காரர் புதர்களை நறுக்கி அழகுபடுத்துவதுபோல் அவற்றை நறுக்கிச் சரியான அளவுக்குக் கொண்டுவரவேண்டும்… இப்படி இன்னும் ஏகப்பட்ட வேலைகள்.
நமக்கு நம்முடைய வேலை அல்லது தொழில்தான் முதன்மையானது. நம்முடைய பெரும்பான்மையான நேரத்தையும் மூளை உழைப்பையும் அது எடுத்துக்கொண்டுவிடுகிறது. அதன்பிறகு மீதியிருக்கிற நேரத்தில் இத்தனையையும் செய்து நம்முடைய பங்குச் சந்தை முதலீடுகளைச் சிறப்பாக்குவது கடினம். ஆனால் அதற்காக, அதை முழுமையாக ஒதுக்கினாலும் நம்முடைய ஒட்டுமொத்த வருவாய் குறைந்துவிடும். என்ன செய்யலாம்?
ஒருவேளை, பங்குச் சந்தையைப்பற்றி நன்கு அறிந்த, மேற்சொன்ன வேலைகளையெல்லாம் ஒழுங்காகத் தொடர்ந்து செய்யக்கூடிய வல்லுனர்கள் யாராவது இருந்தால், நம்முடைய பணத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிடலாம். அவர்கள் நம் சார்பாக அந்தப் பணத்தைச் சரியானபடி முதலீடு செய்து நமக்கு நல்ல வருவாயைப் பெற்றுத் தருவார்கள். அதன்பிறகு, நமக்கு வேண்டியபோது அந்தத் தொகையை எடுத்துச் செலவு செய்துகொள்ளலாம், அல்லது, வருங்கால ஓய்வு வாழ்க்கைக்காக அவர்களிடமே அதைத் தொடர்ந்து வளரவிடலாம்.
Add Comment