9. சிகிச்சை, சிக்கல்கள், தீர்வுகள்
வீட்டில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்பது யாருக்கும் மிகுந்த பதற்றத்தை உண்டாக்கக்கூடிய சூழல். அந்த நேரத்தில் மக்கள் என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று புரியாமல் குழம்பிப்போய் நிற்பதுதான் இயல்பு.
அந்த நேரத்தில் உங்களுக்குள் எழக்கூடிய ஆயிரம் கேள்விகளில் முக்கியமான இரண்டு: செலவுக்கு என்ன செய்வது? நம் கையில் இருக்கிற, அல்லது நாம் புரட்டக்கூடிய பணம் இந்த மருத்துவச் செலவுக்குப் போதுமா?
ஒருவர் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், அல்லது, தான் பணியாற்றுகிற நிறுவனத்தின்மூலம் மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தால் அவருக்கு இந்தக் கேள்விகள் வராது என்று நினைத்துவிடவேண்டாம். மருத்துவக் காப்பீடு என்பது ஒரு குறிப்பிட்ட தொகைவரையில்தான். ஒருவேளை, அந்த ஆண்டில் அவருக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆகிற ஒட்டுமொத்த மருத்துவச் செலவுகள் அந்தத் தொகையைத் தாண்டிவிட்டால், கூடுதல் தொகையை அவர் தன்னுடைய சொந்தச் சேமிப்பிலிருந்துதான் எடுத்துக் கொடுக்கவேண்டும்.
அதனால், மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவர்களுக்கும் பணச் சிக்கல் வரலாம். இந்த விஷயத்தில் மற்றவர்களைவிட அவர்களுக்கு ஆபத்து குறைவு. அவ்வளவுதான்.
Add Comment