பக்தனொருவன் பெற்றோர் மீதும், இறைவன் பாண்டுரங்கன் மீதும் அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அவனுக்கு இறைவன் பாண்டுரங்கன் மீது இருந்த பக்தியைவிட, ஒரு சதவீதம் அதிகமான அன்பும், மரியாதையும் அவனுடைய பெற்றோர் மீது இருந்தது. இந்தச் சிறப்பினை உலகறியச்செய்ய பாண்டுரங்கன் திருவுள்ளம் கொண்டான்.
பக்தன் தனது பெற்றோருக்குச் சேவை செய்து கொண்டிருந்த சமயம் பார்த்து, அவனை நாடிச்சென்று அவனுக்கு தரிசனம் கொடுத்தான். தான் ஆராதித்து வணங்கும் இறைவன், தன்னை நாடி வந்திருக்கின்றான் என்பதை அறிந்தும், பக்தன்அவனுடைய பெற்றோருக்குச் செய்து கொண்டிருந்த சேவையை பாதியில் விட்டுவிட அவனுக்கு மனமில்லை. எனவே, பெற்றோருக்குத் தான் செய்துவரும் சேவை நிறைவடையும்வரை காத்திருக்கும்படி பாண்டுரங்கனை தனது பக்தியினால் அவன் கேட்டுக்கொண்டான்.
ஒரு கையால் தனது பெற்றோருக்குச் சேவை செய்தபடியே, பாண்டுரங்கன் நிற்பதற்கு ஏதுவாக, மறுகையால் ஒரு செங்கல்லைத் தூக்கி எறிந்தான். அகில உலகங்களையும், அதிலுள்ள சராசரங்களையும், ஈரேலு பதினாலு லோகங்களையும் அடக்கி ஆளும் இறைவன் ஒரு எளிய பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு, பத்து இன்ச் நீளமும், அரை அடி அகலமும் உள்ள ஒரு சாதாரண செங்கல் மீது உடனே ஏறி நின்று கொண்டான். பக்தன் பெற்றோருக்குச் சேவை செய்து முடித்துவிட்டு வரும் வரையிலும், அவனுக்காக இறைவன் நின்றுக் கொண்டேதான் இருந்தான்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தில் நடந்த சம்பவம் இது. பண்டரிபுரத்தில் நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்கன், தென்னாட்டிலும் தனது பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக தென்னாங்கூரிலும் நின்று கொண்டிருக்கிறான்.
Add Comment