தெருவுக்குத் தெரு டீக்கடைகளாலான இந்தியா இப்போது பானி பூரிக் கடைகளால் நிறைந்திருக்கிறது. ஒரே மொழி, ஒரே தேர்தலுக்கெல்லாம் முன்னரே இந்தியர்கள் பானி பூரியின் சுவையில் ஒன்றிணைந்து விட்டோம். இப்படிப்பட்ட பானி பூரியின் மகத்துவத்தை அறிந்துகொள்வது முக்கியமல்லவா?
‘ஏக் பிளேட் பானி பூரி பையா’ என்று சொல்லிவிட்டு வாயில் எச்சில் ஊறுவதை கன்ட்ரோல் செய்தபடி நிற்கும்போது நிகழும் அந்தக் கலை. தேர்ந்த கலைஞனைப் போல் இயங்கும் அந்த விரல்களைப் பார்க்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
விடலைப் பையனின் முகத்திலிருக்கும் பருக்களைப் போலப் பொரிந்திருக்கும் அந்த பூரிப்பந்து. அதில் ஒன்றை எடுத்து மண்டை மீது கட்டைவிரலால் கொட்டி ஒரு ஓட்டை போடுவார் பூரிக் கலைஞர். ‘ஒரு மார்க்க ஏன் கோட்டைவிட்ட’ என அம்மா செல்லமாக மண்டையில் கொட்டுவதைப் போல. சிணுங்கியபடியே பூரியும் வாய் திறக்கும். அதற்குள் சத்தான உருளைக்கிழங்கு மசாலாவைத் திணிப்பார். எவ்வளவு மசாலாவை பூரி தாங்குமென்பது அவருக்குத் தெரியும். அம்மாவுக்குத் தெரியாதா பிள்ளையின் வயிறு? கடித்துக் கொள்ளச் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தையும் கொஞ்சம் திணிப்பார். ஒரு சிறு கீறல் கூட விழாமல் அந்த பூரிப்பந்தை தட்டில் வைப்பார். பூரிப்பந்துகளால் அந்த வட்டத் தட்டை வட்டமாக நிறைப்பார்.














Add Comment