2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடர்ச்சியாக பாராலிம்பிம்க் போட்டிகளும் நடந்தன. மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இவை. இந்திய பாராலிம்பிக்ஸ் வீரர்கள் பல பதக்கங்கள் வென்றுள்ளனர். விளையாட்டை ரசிக்கும் இந்தியர்கள் இதனால் கூடுதல் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இருபத்தொன்பது பதக்கங்களைக் குவித்திருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1888ஆம் ஆண்டு முதல் பெர்லினில் காது கேளாதோர்களுக்கான விளையாட்டுகள் தொடங்கி ஆண்டு தோறும் நடைபெற்றன. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இவை இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகள் பரவலாக நடைபெறத் தொடங்கின. உலகப் போரில் காயமடைந்த போர் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மனச் சோர்விலிருந்து விடுபட்டு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
1944ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசினுடைய வேண்டுகோளின்படி டாக்டர் லுட்விக் குட்மேன் இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக் மான்டேவில்லாவில் ஒரு மருத்துவமனை தொடங்கினார். அது முதுகெலும்பு பாதிக்கப்பட்ட, காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை மையம். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரும்பாலானவர்கள் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ராயல் ஏர்ஃபோர்ஸ் சிறப்புப் பிரிவு பைலட்டுகள். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகள் உபயோகித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் விரைவில் குணமடைந்து மறுவாழ்வு பெற பல முயற்சிகள் மேற்கொண்டார் டாக்டர் குட்மேன். அவற்றில் ஒரு முயற்சியாக மருத்துவமனையிலேயே அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தினார். அதில் கலந்து கொண்ட காயமடைந்த போர் வீரர்கள் உற்சாகமடைந்தார்கள்.
Add Comment