Home » பாராளுமன்றத்தின் பாதுகாப்பு எப்படி?
இந்தியா

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு எப்படி?

2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி. காலை சரியாக 11:30 மணிக்கு வெள்ளைநிற அம்பாசிடர் கார் ஒன்று டில்லியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது. காரின் முகப்புக் கண்ணாடியில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பிற்காக என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்பு மிகுந்த பாராளுமன்றத்தின் முதல் வாயிலைக் கடப்பதற்கு அந்த ஸ்டிக்கர் மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

இரண்டாவது நுழைவு வாயிலில் மாநிலங்களவைத் தலைவர் புறப்படுவதற்காக கான்வாய் தயாராக நின்றிருந்தது. வாயிலை நோக்கி வந்த அந்த அம்பாசிடர் காரை வேறு வழியில் போகச் சொன்ன பாதுகாப்பு அதிகாரிகளின் கோரிக்கையை ஓட்டுநர் ஏற்கவில்லை. அடுத்த நொடி அந்த கார் ஓட்டுநரின் சட்டைக் காலர் பாதுகாப்பு அதிகாரியின் கையிலிருந்தது. அந்தக் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் இறங்கி அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கிகளைக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர். நொடி நேர அதிர்ச்சிக்குப்பின் ஒட்டுமொத்த பாதுகாப்பு வீரர்களும் சுதாரித்துக் கொண்டனர். துப்பாக்கித் தோட்டாக்கள் வந்த திசை நோக்கி பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். சத்தமும் புகை மூட்டமுமாய் அந்த இடமே கலவரக் காட்சியானது.

இரண்டு அவைகளும் செயல்பட்டுக் கொண்டிருந்த நாள் அது. பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவைக்குள் இருக்க அவையின் கதவுகள் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிலிருந்து பூட்டப்பட்டன. இந்த தாக்குதலின் முடிவில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரும் பலியாகியிருந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்சல் குரு உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2005, ஆகஸ்ட் 4ஆம் தேதி அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து 2006, செப்டம்பர் 26ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேல்முறையீடு, கருணை மனு தள்ளுபடி ஆகிய சடங்குகளுக்குப் பின்னால் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி அப்சல் குருவுடைய தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்து இருபத்திரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட 2023 டிசம்பர் 13-ஆம் தேதி. புதுடில்லியின் புதிய நாடாளுமன்ற வளாகம். மக்களவையில் பூஜ்ய நேரம் நடந்துகொண்டிருந்த பகல் நேரம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.

பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர். அவர்களில் ஒருவர் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளைத் தாண்டித் தாவிக் குதித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக முன்னேறினார். சிறிது நேரம் அங்கிருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த வண்ணப்பொடி நிரப்பிய குப்பிகளையும் வீசினர். ஆயுதமேந்திய பாதுகாவலர்களுக்கு அவைக்குள் அனுமதியில்லை. எனவே அவைக்குள் எம்.பி.க்களும், மார்ஷல் எனச் சொல்லப்படும் ஊழியர்களும் மட்டுமே அங்கிருந்தனர். அவர்களில் சிலர் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். உள்ளே இப்படிக் கலவரமாக இருக்கப் பாராளுமன்றத்தின் வெளியே இதே போல வண்ணக் குப்பியை கீழே வீசிவிட்டு கோஷங்களை எழுப்பியவாறு ஒரு பெண்மணி பாதுகாப்பு அலுவலரோடு நடந்து சென்று கொண்டிருந்தார். இன்னொரு நபரும் காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார்.

அவைக்குள்ளே நுழைந்த இருவரும் மைசூர் பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹாவிடம் அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தவர்கள் என்பதை முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அரசின் கவனத்தைப் பெறுவதற்காக அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. உண்மையில் அவர்கள் யார், என்ன காரணத்திற்காக இந்தச் செயலில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் பின்புலமாக இருப்பவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகள் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சித் தகவல்களாக ஊடகங்களில் வெளிவந்தவாறு இருக்கின்றன.

இருக்கட்டும். மிக நிச்சயமாக இது பாதுகாப்புக் குறைபாடு என்பதைத் தவிர்த்து வேறு கருத்தில்லை. பாகிஸ்தானிலிருந்தோ அல்லது சீனாவிலிருந்தோ யாராவது வந்து தாக்குதல் நடத்தினால்தான் பாதுகாப்புக் குறைபாடல்ல. வந்தவர்கள் வெடிகுண்டோடு வரவில்லை. எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்ற ஆறுதலோடு இந்தச் சம்பவத்தை இப்போதைக்கு ஒத்திவைப்போம்.

மாநிலங்களவை, மக்களவை என இரண்டு அவைகளும் பல அரசு அலுவலகங்களும் செயல்படும் இடம் பாராளுமன்ற வளாகம். தேசத்தின் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்ற அவைகளின் உறுப்பினர்கள் கூடும் இடம். இந்த இடத்திற்கென அமைக்கப்பட்டிருக்கும் பல அடுக்குப் பாதுகாப்பைப் போல வேறொரு இடம் இங்கு இல்லை. உயர்மட்ட பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகச் சொல்லப்படும் பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? யாரெல்லாம் உள்நுழைய அனுமதி உண்டு?

பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?

மூன்றடுக்குப் பாதுகாப்போடு பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த பாராளுமன்ற வளாகம் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு நான்கு அடுக்குப் பாதுகாப்போடு செயல்பட்டு வருகிறது.

டில்லி மாநகரக் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப், எஸ்.பி.ஜி, என்.எஸ்.ஜி எனப் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு அமைப்பும் அவர்களுக்குரிய தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றி இதற்கான பணியாளர்களைத் தேர்வு செய்கின்றனர்.

பாராளுமன்றப் பாதுகாப்புச் சேவைக்கான செயலகம் சார்பாக ஐ.ஜி. அந்தஸ்திலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிதான் இந்த வளாகத்தின் மொத்தப் பாதுகாப்புக்கும் பொறுப்பு. மேற்சொன்ன பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டுப் பாதுகாப்பினை உறுதி செய்வது பிரத்தியேகமான பணி.

பார்வையாளர்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்?

அவைக்குள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள், அவைச் செயலகங்களின் அலுவலர்கள் போன்றோருக்கு அனுமதியுண்டு. அனைவருக்கும் தனித்தனியாக நுழைவுவாயில்களும் இருக்கின்றன. இவர்கள் தவிர அவை நடக்கும் நேரங்களில் அங்கு நடக்கும் விவாதங்களைப் பார்வையிடுவதற்காக பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர்களுக்கானப் பரிந்துரைக் கடிதங்களை வழங்க முடியும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாளச் சான்றுடன் இந்தப் பரிந்துரைக் கடிதத்தையும் இணைத்து அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பாராளுமன்றச் செயலகத்தின் அலுவலர்கள் விண்ணப்பத்தைப் பரிசோதித்து, குறிப்பிட்ட நாளுக்கான அனுமதிச் சீட்டை வழங்குவார்கள். பார்வையாளரின் பெயரோடு அவருக்கு அனுமதி வழங்கிய எம்.பி.யின் பெயரும் அந்த அனுமதிச்சீட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்

இப்படி அனுமதி பெறும் ஒருவர் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவை நடவடிக்கைகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவார். பார்வையாளர்க்கென தனியாக அமைக்கப்பட்டிருக்கும் நுழைவு வாயில் வழியாக மட்டுமே அவர் அவைக்குள் நுழைய முடியும்.

என்னவெல்லாம் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும்?

பார்வையாளர்கள் மொத்தம் நான்கு கட்டப் பரிசோதனைகளுக்குப் பிறகே அவைக்குள் செல்ல முடியும்.

1. நாடாளுமன்ற நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் மெட்டல் டிடக்டர் வழியாக செல்லும்போது ஏதேனும் ஆயுதங்கள் வைத்திருக்கின்றனரா என சோதிக்கப்படுவர். செல்பேசியோ, பைகளோ உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை.

2. அனுமதிச் சீட்டிலுள்ள “பார் கோட்” சோதனை செய்வதன் மூலமாக அந்த அனுமதிச் சீட்டின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்.

3. பிரதானக் கட்டடத்தின் நுழைவு வாயிலில் மீண்டுமொருமுறை மெட்டல் டிடக்டர் மூலமாக முழு உடல் சோதனை நடைபெறும்.

4. இறுதியாகப் பார்வையாளர் மாடத்திற்குள் நுழையும் முன்னர் அனுமதிச் சீட்டு மீண்டுமொரு சரிபார்க்கப்பட்டு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

இவைதவிர சீருடை அணியாத பாதுகாப்பு வீரர்கள் பார்வையாளர்கள் போல அந்த இடங்களில் பணியிலிருப்பர். யாரேனும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதே இவர்களின் முதன்மையான பணியாக இருக்கும். இவ்வளவு பரிசோதனைகளையும் கடந்துதான் ஒரு சாமானியர் பார்வையாளராக பாராளுமன்ற அவைக்குள் நுழைந்து அவை நடவடிக்கைகளைப் பார்வையிட முடியும்.

இவ்வளவிற்கும் பிறகுதான் பாதுகாப்பை மீறியதொரு சரித்திர சம்பவம் நடந்தேறியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை வளாகத்திற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என சபாநாயகர் அறிவித்திருக்கிறார். அதோடு இந்தப் பாதுகாப்பு மீறல் தொடர்பாக விசாரணை நடத்த உள்துறைச் செயலாளருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் டில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்து துரித விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு பல்வேறு அரசியல் காரணங்களும் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற வளாகம் வெறும் கட்டடம் மட்டுமல்ல. அரசியல் காரணங்களுக்காகவோ பிற எதற்காகவோ அதன் மாண்பினைக் குறைக்கும் செயல்களை தயவு தாட்சண்யமின்றி தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரின் கடமை.

அ. பாண்டியராஜன்
a.pandi2023@gmail.com

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!